கோலாலம்பூர், டிச.28-

சாதாரண மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கின்ற பொருள் மற்றும் சேவை வரிக்கான (ஜி.எஸ்.டி) 6 விழுக்காடு குறித்து தேசிய முன்னணி தலைமையிலான மத்திய அரசாங்கம் ஆய்வை மேற்கொள்ளுமா என பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரான வி.சிவகுமார் கேள்வியெழுப்பினார்.

இது குறித்து அவர் இன்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது வசூலிக்கப்பட்டுவரும் 6 விழுக்காட்டு ஜி.எஸ்.டி. வரி மிக அதிகமாக உள்ளதோடு மக்களுக்கு சுமையாகவும் உள்ளது. ஆனால், இந்த வரியைக் குறைப்பதற்கான எண்ணம் மத்திய அரசாங்கத்திடம் இல்லை என அவர் தெரிவித்தார்.

தேசிய முன்னணி அரசாங்கம் வேறு வழி வகையில் வருமானத்தைத் தேடுவதற்கான ஆற்றலை கொண்டிருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ள நிலையில் மத்திய அரசாங்கம் மக்களிடமிருந்து பணத்தைப் பறிக்கின்றது. எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்த போதிலும் ஜி.எஸ்.டி. வரிக்கு 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் அளித்தது.

இந்த வரி அமல்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் நாட்டில் பணவீக்கமும் வாழ்க்கை செலவினங்களும் அதிகரித்துவிட்டது. ஆனால், மக்களின் வருமானம் எந்த மாற்றமும் இன்றி உள்ளது. பலர் வேலைகளை இழந்துள்ளனர். மத்திய அரசாங்கத்தின் முதன்மை வருமானமாக ஜி.எஸ்.டி. வரி இருந்தாலும் பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளது.

பொருட்களின் விலை உயர்வால் இன்று மக்களிடையே வறுமை அதிகரித்துள்ளது. ஆகையால், ஜி.எஸ்.டி. வரியின் 6 விழுக்காடு வரியைக் குறைப்பது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென சிவகுமார் கேட்டுக்கொண்டார்.