அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஸ்தாப்பாக் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் முடிவுக்கு வந்ததா?
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஸ்தாப்பாக் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் முடிவுக்கு வந்ததா?

கோலாலம்பூர், டிச. 28
25 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்தாப்பாக்கிலுள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தைப் புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யும் விவகாரத்தில் தீர்வு காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ம.இ.கா. செத்தியவங்சா தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலைந்துரையாடலின் வாயிலாக தீர்வு காணப்பட்டிருப்பதாக அத்தொகுதியின் தலைவரும் கோலாலம்பூர் மாநகர் மன்ற வாரிய உறுப்பினருமான டத்தோ ராஜா சைமன் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ஆலயத்தின் தோற்றுநர் ராஜாதுரை கோபால், மேம்பாட்டு பிரிவினர் சார்பாக ஜோர்டன், பாதுகாவலர் நிறுவன நடத்துனர் சரவணன் விஜயரத்தினம், அப்பகுதி பொதுமக்கள் முதலானோர் கலந்துக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் வாயிலாக அனைத்து தரப்பினர்களும் இணக்கம் கண்டுள்ள வேளையில் தங்குவதற்கு வீடு இல்லை என கூறிய ஆலய தோற்றுநர் ராஜாதுரைக்கு இன்னும் ஒரு வாரத்தில் பிபிஆர் வீடு பெற்றுத்தரப்படும் என அவர் உறுதியளித்தார்.

இதனிடையே, ஆலயத்தை இடமாற்றுவது தொடர்பில் அதன் நிர்வாகத்தினர் முன்வைத்த 6 கோரிக்கைகளுக்கும் மேம்பாட்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஒப்புதல் வழங்கினார். மேம்பாட்டு நிறுவனம் இதற்கு முன்பு அந்த ஆலய நிர்வாகத்துடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டிருந்தது இந்த பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டதோடு அனைவரின் முன்னிலையில் விளக்கம் வாசித்துக் காட்டப்பட்டது.

ஆலயத்திற்கான புதிய இடத்தை அந்த மேம்பாட்டு நிறுவனம் வழங்கியதோடு ஆலயத்தை இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தது. இதன் அடிப்படையில் புதிய இடத்தில் ஆலய நிர்மாணிப்பு பணிகள் முடிந்தவுடன் முதல் தவணையாக 10,000 வெள்ளியும் இரண்டாம் தவணையாக 10,000 வெள்ளியும் வழங்க அந்நிறுவனம் ஒப்புதல் அளித்தது.

தொடர்ந்து, ஆலயத்திலிருந்து வெளியேறும்படி குண்டர் கும்பல் மிரட்டியதாக தமிழ் நாளேடுகள் உள்பட இணையத்தள செய்தி பதிவேடுகளில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என பாதுகாவலர் நிறுவன நடத்துனர் சரவணன் விளக்கம் அளித்தார்.

மேம்பாட்டு பிரிவின் அங்கீகாரத்துடன் நாங்கள் அங்கு செயல்பட்டதாகவும் அதற்கான ஆதாரப்பூர்வமான கடிதத்தைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் முன்னிலையில் சரவணன் காண்பித்ததோடு பேச்சுவார்த்தைக்கு பின்னர் ராஜாதுரையுடன் அவர் கைக்குலுக்கிக் கொண்டார்.
.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன