கோலாலம்பூர், ஜூலை.24 –
1எம்டிபி எனப்படும் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் தொடர்பாக இதுவரை எதிர்கட்சிகள் தாக்கல் செய்திருந்த 30 கேள்விகளை மக்களவை நிராகரித்ததை அடுத்து திங்கட்கிழமை அவையில் கடும் அமளி ஏற்பட்டது. 13 ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான இரண்டாவது கூட்டம் திங்கட்கிழமை தொடங்கியது.
1எம்டிபி விவகாரத்தில் அந்நியர் தலையீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா, அமெரிக்க நீதித்துறையின் 1எம்டிபி-தொடர்பான வழக்குகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன போன்ற கேள்விகளை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்தனர்.
வைரநகை உள்பட பறிமுதல் செய்யப்பட்ட பணம், சொத்துகள் திரும்பக் கொடுக்கப்பட்டால் அரசாங்கம் ஏற்குமா போன்ற எதிர்கட்சிகளின் கேள்வியையும் மக்களவை நிராகரித்தது. இதனால் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து ஒட்டுமொத்தமாக தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துக்கொண்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அனைத்து கேள்விகளையும் அப்படியே புறக்கணிப்பது முறையல்ல என டிஏபி கட்சியைச் சேர்ந்த பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ துணை சபாநாயகரிடம் முறையிட்டார்.
பதிலுக்கு தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கின் ஆடம்பர பங்களா விவகாரம் குறித்து பேசினர்.
கினாபாத்தாங்கன் நாடாளுமன்ற உறுப்பின் போங் மொக்தார் ரடின், லிம்மின் பங்களா தொடர்பாக தாம் தாக்கல் செய்த கேள்வி, விவகாரம் நீதிமன்றம் சென்றிருப்பதால் நிராகரிக்கப்பட்டது என்றார்.
“நான் அது குறித்து கூச்சல் போடவில்லையே. அவைத்தலைவரின் முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டேனே”, என்றவர் சொன்னார்.
அவைத் துணை சபாநாயகர் இஸ்மாயில் முகம்மட் சைட், கேள்விகள் நிராகரிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தவர்கள் மறுபரிசீலனை செய்யக் கோரி தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்யலாம் என்றார்.
