வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > சுபிட்சம் தழைத்தோங்கட்டும்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

சுபிட்சம் தழைத்தோங்கட்டும்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

ஒவ்வோர் ஆண்டு துவக்கத்திலும் புதிய எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் அவ்வாண்டை நோக்கி நாம் பயணிக்கின்றோம்.  இப்புதிய ஆண்டு அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என சுகாதார அமைச்சரும் ம.இ.கா. தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அவ்வகையில், நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிதவாத அடிப்படையில் நல்லதொரு சுபிட்சத்தை வழங்க நாம் வகை செய்ய வேண்டும். இன வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாம் ஒவ்வொருவரும் நமது பங்கினை ஆற்ற வேண்டும். பல இனத்தவர்கள் வாழும் இந்நாட்டில் எல்லா மதத்தினரிடையும் நல்லிணக்கமும் ஒற்றுமை உணர்வும் மேலோங்க வேண்டும். ஒற்றுமை மேலோங்க அனைத்து இனத்தவர்களும் பிற இனத்தவர்களின் சமயம், கலாச்சாரம், இறைநம்பிக்கை அடிப்படையில் மிதவாதத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே ஒரு நாடு சுபிட்சமும் ஒற்றுமையும் அடைய முக்கிய அம்சமாகும்.

தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு சுகாதார ரீதியில் நாடு பல சவால்களை எதிர்கொள்ள சுகாதார அமைச்சர் என்ற முறையில் நாட்டின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல உருமாற்றத் திட்டங்களை வகுத்துள்ளோம். இந்த உருமாற்றுத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடையே மிகச் சிறந்த சுகாதார விழிப்புணர்வைக் கொண்டு வரும் என்பதில் நான் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இந்த 2018ஆம் ஆண்டு நாட்டின் பொதுத்தேர்தலைச் சந்திக்கக்கூடியா ஓர் ஆண்டு என்பதால் இவ்வாண்டு நாட்டிற்கு மட்டுமின்றி ம.இ.காவிற்கும் மிக முக்கியமான ஓர் ஆண்டாகும். கடந்த 2017ஆம் ஆண்டில் ம.இ.கா கட்சியில் இருந்த சிறு சிறு பிரச்சனைகளுக்கான அனைத்து முடிச்சுகளும் அவிழ்கப்பட்டுள்ளன. கட்சிக்கு வெளியேயும் பிரிந்து கிடந்த ம.இ.கா உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைந்து கட்சியின் ஒற்றுமையை நிலைநாட்டியுள்ளனர். அவ்வகையில், நடந்து முடிந்த 2017ஆம் ஆண்டு ம.இ.காவை மீண்டும் பலம் பொருந்திய கட்சியாக உருமாற்றியுள்ளது. இந்த உருமாற்றமானது வரக்கூடிய பொதுத்தேர்தலை ம.இ.கா சிறப்பாக எதிர்கொள்வதோடு, கடந்த பொதுத்தேர்தலைக் காட்டிலும் சிறந்த அடைவைப் பதிவு செய்யும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

அதேநேரத்தில், ம.இ.காவின் தேசியத் தலைவர் என்ற அடிப்படையில் இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமுதாய உருமாற்றுத் திட்டங்கள் தேவையாகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. நம் சமுதாயத்தின் கல்வி தகுதியும் பொருளாதார தகுதியும் மேம்பாடு காணும் பொருட்டுத் துரிதமாகச் செயல்பட்டு, அதற்குரிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எனது தலையாய நோக்கமாகும் .

நான் முன்னமே கூறியது போல இந்தியச் சமுதாயம் பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற வேண்டும். இந்தியர்களை நாடு தழுவிய நிலையில் சிறு தொழில் வியாபாரிகளாக உருவாக்குவதோடு, ஏற்கனவே இருக்கும் சிறுதொழில் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளோடு, சிறு தொழில், நடுத்தரவர்த்தகம், (SME) என அனைத்திலும் இந்தியர்கள் வியாபார நுணுக்கத்திறன் பெற்றிருக்க வேண்டும். அதனைக்கொண்டு நாட்டில் பல இந்திய தொழில் முனைவர்களை உருவாக்க வேண்டுமென்பதே ம.இ.காவின் நோக்கமாகும்.

மேலும், தமிழ்ப்பளிகளின் வளர்ச்சி, தமிழ்க்கல்வியின் தேர்ச்சி, இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்களின் முன்னேற்றம், உயர்கல்விக்கூடங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை என அனைத்திலும் உயர்நிலையை அடையக்கூடிய முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தை ஆக்ககரமான முறையில் செயல்படுத்த மேற்குறிப்பிட்ட அனைத்து அமசங்களையும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள முறையில் இந்தியர்களுக்கான தூரநோக்கு வரைவுத் திட்டமானது பல கலந்துரையாடல்களுக்குப் பின் 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வரைவுத்திட்டத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு இந்தியர்கள் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே எனது எதிர்ப்பார்ப்புகளாகும்.

மேலும், சமுதாயத்திற்குத் தயங்காமல் குரல் கொடுக்கும் நிலையைக் கட்சியில் உருவாக்க வேண்டும். கட்சியின் மீது நம் சமுதாயத்தின் எதிர்பார்ப்பும் இதுவே ஆகும். அந்த நோக்கத்தோடுதான் நாம் அனைவரும் நம் பங்கினை ஆற்ற வேண்டும். தற்பொழுது ம.இ.கா கட்சிக்குத் தேவையான வலு, பலம், உறுப்பினர்களிடையே இருக்கும் ஒற்றுமை அனைத்தும் மேலோங்கப்படவும் வேண்டும். அதேநேரத்தில், இந்தியச் சமுதாயமும் ம.இ.கா மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். சமுதாயத்தின் நம்பிக்கையே வரக்கூடிய பொதுத்தேர்தலை ம.இ.கா எதிகொள்ளும் உந்துசத்தியாகும்.

அவ்வகையில், இந்த 2018ஆம் ஆண்டுக்கான நமது கனவுகளையும் முயற்சிகளையும் நிறைவேற்ற நாம் அனைவரும் புத்தாக்கச் சிந்தனையோடு செயல்பட்டு; புதியதொரு சமுதாயமாக உருவெடுக்க வேண்டும். அவ்வகையில், மலேசிய வாழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இஃது அனைவருக்கும் சிறந்ததோர் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன