திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > அம்பாங் வாக்காளர்கள் பி.கே.ஆருக்கு விசுவாசமாக இருப்பார்கள்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

அம்பாங் வாக்காளர்கள் பி.கே.ஆருக்கு விசுவாசமாக இருப்பார்கள்!

கோலாலம்பூர், ஜன.1-
2 தவணைகள் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பி.கே.ஆரின் மகளிர் பிரிவு தலைவி ஜூராய்டா கமாருடின் வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் அந்நாடாளுமன்றத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் பி.கே.ஆருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என தெரிவித்தார்.

இவ்விரு தவணைகளில் அங்குள்ள மக்களுக்கு நான் வழங்கிய சேவைகள் அவர்களுக்கு மனநிறைவை அளிக்கும் என நம்புகின்றேன். அதனால், அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என அவர் மேலும் சொன்னார். அம்பாங்கிலோ அல்லது இதர தொகுதிகளிலோ போட்டியிட நான் தயாராக உள்ளேன். இது ஒரு கௌரவமாக இருக்கும். இம்முறை நாங்கள் உண்மையிலேயே அம்பாங்கை தற்காக்க நினைக்கின்றோம். காரணம், நாங்கள் புத்ராஜெயாவைக் கைப்பற்ற உறுதி கொண்டுள்ளோம்.

கடந்த பொதுத்தேர்தலில் நாங்கள் வென்ற தொகுதிகளை நாங்கள் தற்காக்க வேண்டியுள்ளது. அதோடு, மற்ற தொகுதிகளைக் கைப்பற்ற போராடுவோம். நாங்கள் புக்கிட் அந்தாராபங்சாவை நிலைநிறுத்துவதோடு தற்போது பாஸ் வசம் இருக்கும் லெம்பா ஜெயாவைக் கைப்பற்ற முயற்சிகளை மேற்கொள்வோம். சிலாங்கூரில் அடைவுநிலை குறித்து நாங்கள் ஆய்வை மேற்கொள்வதோடு பாஸ் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்வோம்.

இம்முறை மும்முனை போட்டிகள் நிகழ்ந்தாலும் அம்பாங் நாடாளுமன்ற தொகுதியில் பி.கே.ஆர் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நாங்கள் எப்போதும் தேர்தல் பிரச்சார குதுக்கலத்திலேயே இருக்கின்றோம். அடிமட்டம் வரையில் பொதுமக்களுடம் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றோம்.  நாங்கள் அந்நிய நாட்டவர்கள் விவகாரத்தில் மத்திய அரசாங்கத்தின் கொள்கைத் தொடர்பில் சில பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம். குறிப்பாக, லெம்பா ஜெயாவில் அதிகமான அந்நிய தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில், ரோஹிங்யா, இந்தோனிசியா, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.

இவர்களுக்கான வீடமைப்பு மற்றும் தங்குமிடம் தொடர்பில் தெளிவான கொள்கை அரசாங்கத்திடம் இல்லை. இவ்விவகாரத்தில் தீர்வு காண அமைப்பை ஒன்றை அமைக்கும்படி நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் எழுப்பியுள்ளேன். ஆனால், இன்று வரையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை என ஜூராய்டா கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன