புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சிறப்புச் செய்திகள் > புத்தாண்டு புதையல் பத்து – அனேகன்.கோம்
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புத்தாண்டு புதையல் பத்து – அனேகன்.கோம்

நமது திசைகளைத் தீர்மானிப்பது சுதந்திரம் மட்டுமல்ல. ஒருவகையில் பெரிய பொறுப்புணர்வும்கூட. ஜனவரி முதல் வாரத்தில் இருக்கும் வேகமும் ஆர்வமும் நாள்பட நாள்பட குறையும். தொடங்குவதில் இருக்கும் ஆர்வம் தொடருவதில் இல்லாமல் போவது சகஜமான விஷயம் என்றாகி விட்டது. உணர்ச்சி வேகத்தில் மேற்கொள்கிற சபதமோ தீர்மானமோ தொடர்வதற்கென்று சிரத்தையும் அக்கறையும் தேவைப்படுகிறது.

எனவே புத்தாண்டில் எடுக்கிற தீர்மானங்களில் தீர்மானமாய் இருக்க வேண்டும். எப்போதெல்லாம் புதிய வளர்ச்சி வருகிறதோ, எப்போதெல்லாம் பொருளுள்ள மாற்றம் நோக்கிப் போகிறோமோ, அப்போதெல்லாம் புத்தாண்டுதான். ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, புதிய நிதியாண்டு, புதிய கல்வியாண்டு, உங்கள் பிறந்த நாள் எல்லாமே புதிய மாற்றம் ஆரம்பமாகிவிட்டதா என்று கேட்டு காலம் வைக்கிற அலாரம்தான். புத்தாண்டு வார்த்தைகளால் கொண்டாட வேண்டியதல்ல. வாழ்க்கையால் கொண்டாட வேண்டியது. இந்தப் புத்தாண்டை அர்த்தமுள்ளதாய், வெற்றிமிக்கதாய் ஆக்க அனேகன்.காம் வழங்க்கும் ஆலோசனைகள் 10 :

1. நேரத்தைத் திட்டமிடுங்கள்:

குறிப்பிட்ட வேலைக்கென்று நேரம் ஒதுக்கி விட்டால் அதை மறுபடி மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். எத்தனை மணிக்கு எதைச் செய்வது என்று முடிவெடுத்தாலும் அத்தனை மணிக்கு அதை செய்து முடிப்பதே உத்தமம். எதற்கு முதலிடம், எதற்கு முக்கியத்துவம் என்பதெல்லாம் நீங்கள் முடிவு செய்கிற விஷயங்கள்.

2.பத்து நிமிடங்கள் முன்னதாக :

உங்கள் நாளை வழக்கமாகத் தொடங்குவதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகத் தொடங்குவது என்று முடிவெடுங்கள். காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

3. முதல் முப்பது நிமிடங்கள் :

ஒரு நாளின் முதல் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஒரு நாளின் முதல் முப்பது நிமிடங்களை அதற்காக செலவிடுங்கள். ஒருவேளை அந்த வழக்கம் இல்லையா? உடனே…. உடனே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. உங்கள் வாழ்க்கை முறையை வெளிப் படுத்துங்கள்:

உங்களுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் உங்களின் அன்றாட நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்துங்கள். நேரிலோ, தொலைபேசியிலோ உங்களை எப்போதெல்லாம் அழைக்கலாம் என்பதைத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பழக்கங்களுக்கு நீங்கள் மரியாதை கொடுத்தால் தானே மற்றவர்கள் கொடுப்பார்கள். இதில் எப்போதும் உறுதியாய் இருங்கள்.

5. வெற்றிக்கான விலைகளைக் கொடுங்கள்:

உடலில் எடையைக் குறைப்பது ஒருவகை வெற்றி. தொழிலில் லாபத்தைக் கூட்டுவது இன்னொரு வகை வெற்றி. இவை அனைத்திற்குமே சில விலைகள் உண்டு. திட்டமிடுவது, நேரம் ஒதுக்குவது, கவனம் குவிப்பது போன்றவையே அவை. உரிய விலைகளைக் கொடுத்தால் பெரிய வெற்றிகளைக்கூட எளிதாய் எட்டலாம் என்பதே சாதனையாளர்களின் வாழ்க்கை சொல்லிக் கொடுக்கிற சூத்திரம்.

6. உணவிலும் ஓய்விலும் ஒழுங்கு :

வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தையும் ஓய்வு நேரத்தையும் அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் ஓய்விலும் மிதமான, இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள், வயிற்றின் மீது வன்முறையைப் பிரயோகம் செய்யாதீர்கள்

7. உங்களுக்கான முடிவுகளை நீங்களே எடுங்கள்:

வாழ்க்கையை ஒரு சமுத்திரமாகக் கற்பனை செய்தால், அதில் கப்பலை நீங்களே இயக்குகிறீர்களா என்று பாருங்கள். ஒரு பயணியாக மட்டுமே இருப்பவர்கள் பயணத்துக் கான திசைகளைத் தீர்மானிக்க முடியாது. உங்கள் திசைகளைத் தீர்மானிப்பது சுதந்திரம் மட்டுமல்ல. ஒருவகையில் பெரிய பொறுப்புணர்வும்கூட.

8. அடுத்து என்ன? இதுவே மந்திரம்:

வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். சொன்ன வேலையை உதவியாளர் செய்யவில்லையா? அடுத்தது என்ன? இப்போதாவது செய்யச் சொல்ல வேண்டியதுதான். அடுத்தது என்ன? (WHAT NEXT?) இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

9. மனிதர்களை நெருங்குங்கள்:

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு சமஉரிமை இருக்கிறது. காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

10. மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்:

மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – மகிழ்ச்சியாய் – வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.

நல்வாழ்த்துகள்…… புத்தாண்டில் தொடங்கும் உங்கள் புதிய வாழ்க்கைக்கு!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன