கோலாலம்பூர், ஜன. 1-

பக்தி சக்தி இயக்கம் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது. டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணியின் ஆலோசனையின் கீழ் இந்த இயக்கம் அடுத்த இலக்கை நோக்கி தமது பயணத்தை தொடங்குவதாக அதன் தலைவர் டத்தோ பழனியப்பன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பக்தி சக்தி இயக்கம் முன்னெடுத்த பிரத்தியேக வகுப்புகளின் மூலம் 1000 மாணவர்கள் பலனடைந்தார்கள். இந்த முறை 2500 மாணவர்ளை நோக்கி 2018ஆம் ஆண்டுக்கான பதிவு தொடங்கியுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டுமென்பதுதான் இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கம். பி. 40 கீழ் உள்ள குடும்ப பின்னணியைக் கொண்ட பிள்ளைகள் கல்வியில் சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்வதில் பல தடங்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இவர்களை இந்த திட்டத்தின் கீழ் இணைத்துக் கொண்டு, அதன் மூலம் அவர்களுடன் இணைந்து பணியாற்றி, சிறந்த கல்வியாளர்களாக அவர்களை உருவாக்க பக்தி சக்தி இயக்கம் போராடுவதாக டத்தோ பழனியப்பன் தெரிவித்தார்.

கல்வியின் நுணுக்கங்களை மாணவர்கள் அறிந்து கொண்டால் நிச்சயம் சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்ய முடியும். அதனால் எஸ்.பி.எஸ். தேர்வுத் தாள்களை தயாரிக்கும் ஆசிரியர்கள், அந்தந்த மொழியியல் துறையில் வல்லமை பெற்ற ஆசிரியர்களைக் கொண்டுதான் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

எஸ்.பி.எம். மாணவர்கள் மட்டும்தான் நமது நோக்கம். குறிப்பாக பி 40 கீழ் இருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் கல்வி ஆற்றலை முழுமையாக ஆராய்ந்து அதன் பின் அவர்களுக்கான பாடத்திட்டத்தை முன்னெடுக்க ஆசிரியர்கள் தயார் நிலையில் இருக்கின்றார்கள் என்று டத்தோ பழனியப்பன் கூறினார்.

சமயத்தை மாணவர்கள் முழுமையாக அறிந்துக் கொண்டாலே கட்டொழுங்குமிக்கவர்களாக அவர்கள் உருமாறி விடுவார்கள். அதனால் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் காயத்திரி மந்திரத்தை ஓதுவார்கள்.

மாணவர்களுக்கு முதன்மையான 5 பாடங்கள் குறித்து போதிக்கப்படும். மலாய், ஆங்கிலம், கணிதம் நன்னெறி கல்வி, அறிவியல் குறித்து அட்டவணை அடிப்படையில் போதிக்கப்படும். இதில் மிக முக்கியமாக எம்மாதிரியான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டுமென மாணவர்களுக்கு போதிக்கப்படும்.

எந்தக் கட்டணமும் இல்லாமல் இந்த பிரத்தியேக வகுப்பு 25 வாரங்கள் நடைபெறவுள்ளது. அதோடு மாபெரும் கல்விக் கருத்தரங்கும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு 2500 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இதுவரையில் 1600 மாணவர்கள் தங்களின் வருகையை உறுதி படுத்தியுள்ளார்கள். வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டு கல்வியில் மேம்பட வேண்டுமென்று நினைக்கும் எஸ்பிஎம் மாணவர்கள் ஜனவரி 5, 6 ஆம் தேதிகளில் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என டத்தோ பழனியப்பன் கூறினார்.

ஜனவரி 5ஆம் தேதி கெடா, பெர்லிஸ், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் வேளையில் ஜனவரி 6ஆம் தேதி, பினாங்கு, பேரா,பகாங், சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்காக நேர்முகத் தேர்வு நடைபெறும். இந்த நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் மேல் விவரங்களுக்கு அகினேஷ் 014−9444587 கண்ணன், 017−3175417 அல்லது விக்ரமன் 019−7733671 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.