மலாக்கா, ஜன.2-
38 லட்சம் செலவில் ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிர்மாணிக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு பள்ளி தவணையில் இயங்கத் தொடங்கும் என வாக்குறுதி அளித்த துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதனின் அறிவிப்பு காற்றில் பறந்ததா? என பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர்.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்பள்ளிக்கு வருகைப் புரிந்த அவர், அப்பள்ளியைப் பார்வையிட்டதோடு மாநில அரசாங்கம் தாமான் ஆயர் மெர்லிமாவ் பகுதியில் ஒதுக்கியுள்ள 4 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி தமிழ்ப்பள்ளி கட்டப்படும். தோட்டபு புறத்தில் இருக்கும் இப்பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் மட்டுமே படிக்கின்ற நிலையில் புதிய இடத்தில் கட்டப்படவிருக்கும் இப்பள்ளியில் 200 மாணவர்கள் வரையில் பயில முடியும் என டத்தோ கமலநாதன் கூறியிருந்தார்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை இன்று தொடங்கிய வேளையில், மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டத்தில் களமிறங்கினர்.

இப்பள்ளிக்கு புதிய இடம் வழங்கப்பட்டு கட்டப்படும் என அப்போதைய துணைப்பிரதமர் டத்தோ முகைதீன் யாசின் 2011ஆம் ஆண்டு மெர்லிமாவ் இடைத்தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தார். இருந்த போதிலும், பல காரணங்களால் இப்பள்ளியின் கட்டுமான பணிகள் தாமதமாவதாக கூறிய கமலநாதன், 2018க்குள் கட்டிமுடிக்கப்படும் என உறுதியளித்தார்.

ஆனால், இன்று வரையில் அதற்கான நகர்வுகள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. இதற்கு ஒரு பதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவில்லை என அவர்கள் கூறினர். இதனிடையே, இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி பெற்றோர்களைக் கேட்டுக்கொண்ட போதிலும் பெற்றோர்கள் இவ்விவகாரத்தில் தீர்வு வேண்டுமென உறுதியாக இருந்தனர்.

தற்போது ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடம் தொடர்பில் ஜாசின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹாஜி அஹ்மாட் பின் ஹம்சா அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள், அரசு சார்பற்ற இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியின் கட்டடம் தொடர்பில் முன்பு டத்தோ கமலநாதன் பள்ளிக்கு வருகை புரிந்த போது

டத்தோஸ்ரீ ஹாஜி அஹ்மாட் பின் ஹம்சா பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள், அரசு சார்பற்ற இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது