கோலாலம்பூர், ஜன.2
இவ்வாண்டில் நடைபெறவிருக்கும் நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலைக் கண்காணிக்க அனைத்துலகத் தேர்தல் கண்காணிப்பாளர்களை அரசாங்கம் அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை பிகேஆரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான யுஸ்மாடி யூசோப் அரசாங்கத்திடம் முன்வைத்தார்.

வரும் பொதுத்தேர்தல் லஞ்ச ஊழல் ஏதுமின்றி முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஸுல்கிப்ளி அகமட் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இந்த தேர்தல் லஞ்ச ஊழலின்றி நடைபெறும் வகையில் தேசிய போலீஸ் படை, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து எம்.ஏ.சி.சி செயல்பட எடுத்திருக்கும் முடிவையும் நான் வரவேற்கிறேன்.

இந்தப் பொதுத்தேர்தலைக் கண்காணிக்க அனைத்துலகத் தேர்தல் கண்காணிப்பாளர்களை அரசு அழைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போதைய எம்ஏசிசி தலைமைத்துவம் கவனம் செலுத்தி இருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இதை மிகவும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதை உறுதி செய்ய காமன்வெல்த் சுதந்திரத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் விவகாரங்களுக்கான அதிகாரக் கழகங்களுக்கு அரசு அழைப்பு விடுக்கலாம் என யுஸ்மாடி குறிப்பிட்டார்.