முகப்பு > மற்றவை > கிளந்தானில் திருடர்களின் கைகள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் வாயிலாக வெட்டப்படுமாம்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

கிளந்தானில் திருடர்களின் கைகள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் வாயிலாக வெட்டப்படுமாம்!

கோத்தாபாரு, ஜன. 2-
கிளந்தானில் ஹூடூட் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட திருடர்களின் கைகளை வெட்டுவதற்கு அறுவை சிகிச்சை நிபுணர்களின் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அம்மாநில துணை மந்திரி பெசார் டத்தோ முஹம்மட் அமார் நிக் அப்துல்லா தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு இந்த தண்டனையை வழங்கும்போது உடல் உறுப்புகளில் இதர பகுதிகளில் காயங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு நிபுணர்களின் உதவி தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

அக்காலத்தில் குற்றவாளிகளின் கைகள் அப்படியே வெட்டப்பட்டது. இதனால், கைகளின் இதர பகுதிகளில் காயம் ஏற்படும் நிலை இருந்தது. நவீன காலத்தில் கைக்கு காயம் ஏற்படாத வகையில் கையின் மணிகட்டு வாயிலாக அறுவை சிகிச்சை நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளின் கைகளை வெட்ட வேண்டுமென உலாமாக்கள் கருதுகின்றனர்.

இவ்விவகாரத்தில் தகுந்த மற்றும் நடைமுறையான அணுகுமுறையைப் பயன்படுத்துவதை நாங்கள் உறுது செய்வோம். குறிப்பாக, குற்றவாளிகளின் கைகளை வெட்டும் விவகாரத்தில் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு சமய ரீதியிலான விளக்கம் மற்றும் வழிக்காட்டி தேவைப்படுவதாக மாநில பொதுச்சேவை ஊழியர்களுடனான சந்திப்பு மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோ முஹம்மட் அமார் நிக் அப்துல்லா கூறினார்.

இம்மாநிலத்தில் ஹூடுட் சட்டத்தை அமல்படுத்துவதில் கத்தார், சவூதி அரபு, இந்தோனிசியாவின் ஆச்சே முதலானவற்றை மாநில அரசாங்கம் முன்மாதிரியாக கொள்ளும். கத்தாரில் ஹூடுட் சட்ட அமலாக்கம் முறையாக உள்ளது. இதன் காரணமாக அதனைப் பற்றி தெரிந்துக்கொள்ளும் வகையில் கத்தாருக்கு செல்வதற்கான பரிந்துரை இருப்பதாகவும் அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன