கோலாலம்பூர், ஜன.3-

வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை அறிவிக்கும் அக்கூட்டணியின் முடிவு ஏற்புடையது அல்லது என முன்னாள் செணட்டர் டத்தோ முஹம்மட் இசாம் முகமட் நோர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் எதிர்கட்சிகள் மாற்றத்திற்கு துணிவதோடு நாட்டின் அரசியலில் நீண்ட ஆண்டு காலமாக இருந்துவிட்ட துன் டாக்டர் மகாதீருக்கு பதிலாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென அவர் கூறினார்.

அக்கூட்டணி அஸ்மினை பிரதமராகவும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரை துணைப்பிரதமராகவும் உள்பட இன்னும் இதர இளம் தலைவர்களை சேர்த்து புத்ராஜெயாவில் வலுவான அணியை அமைக்க முன்வர வேண்டும். மாற்றம் என்பது அடிப்படை வலுவானதாக இருக்க வேண்டும். அஸ்மின் அலியை பிரதமராக நிறுத்துவதற்கு அடிப்படை உள்ளது. காரணம், அவர் சிலாங்கூரின் மந்திரி பெசாராக பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தை தனது நிர்வாகத்தால் சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.

மேலும், ஆளும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு பழைய தலைவர்களை எதிர்கட்சிகள் சார்ந்துள்ளது ஏற்புடையது அல்ல. மாறாக, அப்பொறுப்பை இளம் தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். துன் மகாதீர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், டான்ஸ்ரீ முகைதீன் யாசின், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா, லிம் கிட் சியாங் முதலானோர் இளம் தலைவர்களான அஸ்மின் அலி, நூருல் இசா, முக்ரிஸ் மகாதீர் முதலானோருக்கு வழிவிட வேண்டும் என இசாம் கேட்டுக்கொண்டார்.