தைப்பேய், ஜன.4
ஸ்பைடர்மேன் உடையை அணிந்திருந்த நிலையில் ஐந்தாம் மாடியிலிருந்து கீழே விழுந்த மலேசிய மாணவன் உயிரிழந்தான்.  சாங்ஹுவா பகுதியிலுள்ள டாயே பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் அம்மாணவன் கடந்த புதன்கிழமை அப்பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியின் ஐந்தாம் மாடியிலிருந்து கீழே விழுந்துக்கிடக்கக் காணப்பட்டதாக தைவானின் செய்தி நிறுவனமான செண்ட்ரல் நியூஸ் ஏஜேன்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட தங்கும்விடுதியின் கீழ் அந்த மலேசிய மாணவனை மற்றொரு மாணவன் கண்டதாகவும் சிமெண்டு தரையில் தலைக்குப்புற படுத்திருந்த நிலையில் உடலில் அசைவுகள் இல்லாமல் அந்த மாணவன் இருந்ததாகவும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திடமும் போலீசிடமும் கூறியதாக அவர் தெரிவித்தார்.

போலீஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே லீ என அழைக்கப்படும் அந்த மலேசிய மாணவன் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது அந்த மாணவனின் கைப்பேசி ஐந்தாவது மாடியிலுள்ள பால்கனியில் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் அவன் தனது கைப்பேசியில் படம் எடுக்கவிருப்பதாகவும் தம்மிடம் கூறியதாக அவனது வகுப்பு நண்பர்கள் போலீசின் விசாரணையில் தெரிவித்துள்ளனர். அதனால், லீ அந்த தங்கும் விடுதியின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்திருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கின்றது.

இதனிடையே, சாங்ஹுவா பகுதியிலுள்ள போலீஸ் துறையின் விசாரணை பிரிவின் தலைவர் சான் திங்யூ கூறுகையில், மலேசிய மாணவனின் இறப்பிற்கான காரணத்தைத் தனது தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை என்றும் இந்த சம்பவத்தைப் பார்த்த சாட்சியாளர்கள் இல்லாததால் தாமதமாகி வருவதாக கூறினார்.

மேலும், டாயே பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் லீயின் மரணம் குறித்து மலேசியாவிலுள்ள அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டதாகவும் அவர்கள் தைவானுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.