வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியோட்விற்கு கௌரவ முனைவர் பட்டம்!
முதன்மைச் செய்திகள்

டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியோட்விற்கு கௌரவ முனைவர் பட்டம்!

புத்ராஜெயா, ஜூலை 24-
புத்தாக்கத் துறையில் அனைத்துலக அளவில் தரம் வாய்ந்த மாணவர்களைத் தருவித்துவரும் லிம்கோக்விங் பல்கலைக்கழகம் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியோட்விற்கு தலைமைத்துவ உருமாற்றம் எனும் கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

இப்பல்கலைக்கழகத்தின் 2017ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா அண்மையில் புத்ராஜெயாவிலுள்ள பி.ஐ.சி.சி. மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட அவருக்கு அப்பல்கலைக்கழகத்தின் வேந்தரான பகாங் மாநிலத்தின் மேன்மை தங்கிய சுல்தானா ஹாஜ்ஜா டாக்டர் கல்சம் வழங்கினார். நாட்டின் மனிதவள மேம்பாட்டிற்கு டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியோட் வழங்கிவரும் சேவைக்கு அங்கீகாரமாக இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.

டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியோட் தனது உரையில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்டவற்றில் 12 கல்வி மையங்களைக் கொண்டிருக்கும் உலக புகழ்பெற்ற லிம்கோக்விங் பல்கலைக்கழகத்துடன் தான் இணைந்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

அனைத்துலக அளவில் போட்டித்தன்மையையும் நான்காவது தொழில்புரட்சியையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மாணவர்களும் திறந்த அறிவையும் திறன்களையும் கொண்டிருக்க வேண்டும். நாம் நமது வாழ்வில் கற்பதை நிறுத்த முடியாது. எப்போதும் நாம் கற்றுக்கொள்வதற்கு புதிய திறன்களும் தொழில்நுட்பங்களும் இருந்து கொண்டுதான் இருக்கும் என டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியோட் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்நிகழ்ச்சியில் பேசிய மேன்மை தங்கிய சுல்தானா ஹாஜ்ஜா டாக்டர் கல்சம் கூறுகையில், பட்டம் பெற்ற மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியை உலகிற்கும் வருங்கால தலைமுறையினருக்காகவும் சரியான முறையில் பயன்படுத்திகொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

உலகத் தலைவர்களாக வருங்காலத்தில் நீங்கள் வருவதற்கான அதிகாரம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. உலகிற்கு தாக்கங்களை வழங்கக்கூடிய பல வகையான விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில் உங்களைப் போன்ற இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள். லிம்கோக்விங் பல்கலைக்கழகம் அதன் மாணவர்களுக்கு தரம் வாய்ந்த கல்விகயையும் அனுபவங்களையும் வழங்கியுள்ளது. உலகத்தை மாற்றக்கூடிய ஆற்றலை இப்பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. கற்றவற்றை நீங்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டால் அது இப்பல்கலைக்கழகத்திற்கு பெருமையை ஏற்படுத்தும். இறுதியாக மேன்மை தங்கிய சுல்தானா ஹாஜ்ஜா டாக்டர் கல்சம் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

அதோடு, மலேசியாவிற்கான ஐக்கிய நாட்டு சபையின் குளோபல் கோம்பேக்ட் ஆலோசக வாரியத்தின் தலைவராகவும் சியாரா லியோன் நாட்டின் அதிபர் எர்னெஸ்ட் பாய் கொரோமாவின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ள லிம்கோக்விங் பல்கலைக்கழகத்தின் தோற்றுநருமான லிம்கோக்விங்கிற்கு தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.

உங்களின் எதிர்காலத்தை வடிவமையுங்கள் எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் 64 நாடுகளைச் சேர்ந்த 1,200 மாணவர்கள் தொழில்நுட்ப வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, அனிமேஷன், நிகழ்ச்சி மேலாண்மை, சுற்றுலா நிர்வாகம், விளையாட்டு நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன