மென்செஸ்டர், ஜன. 7 –
இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.சனிக்கிழமை எத்திஹாட் அரங்கில் நடைபெற்ற 3 ஆம் சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 4 – 1 என்ற கோல்களில் பெர்ன்லியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஒரே பருவத்தில் நான்கு கிண்ணங்களை வெல்லும் தனது வாய்ப்பை மென்செஸ்டர் சிட்டி பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

முதல் பாதியில் ஒரு கோலில் பின் தங்கியிருந்த மென்செஸ்டர் சிட்டி , இரண்டாம் பாதியில் அதிரடியாக விளையாடி நான்கு கோல்களைப் போட்டது. 25 ஆவது நிமிடத்தில் ஆஸ்லி பார்ன்ஸ் போட்ட கோலின் மூலம் பெர்ன்லி 1 – 0 என்ற கோலில் முன்னணி வகித்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 56, 58 ஆவது நிமிடங்களில் செர்ஜியோ அகுவேரோ போட்ட இரண்டு கோல்களின் மூலம் மென்செஸ்டர் சிட்டி 2 – 1 என முன்னணிக்கு சென்றது. 72 ஆவது நிமிடத்தில் லெரோய் சானே மூன்றாவது கோலைப் போட்ட வேளையில் 82 ஆவது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வா போட்ட கோல், மென்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதிச் செய்தது.

