இசை!  உள்ளுர்ணவில் ஒவ்வொர் அணுக்களில் கலந்திருக்கும் இன்னொரு உயிர். அதன் ஆழத்தை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.  உலகெங்கும் நாதமாகி இருக்கும் இந்த இசை எத்தனையோ இசை சகாப்தங்களை ஆசிர்வதித்து கலைவாணியில் மடியில் பாசமாய் சாய்த்துக்கொண்டது.  இதில் தமிழ் இசையால் இந்த உலகத்தை கட்டிப்போட்ட ஆர்மேனிய பெட்டிக்காரர் இளையராஜாவுக்கு பிறகு,  அத்தனை கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய பெருமை இசை புயல் ஏ.ஆர் ரஹமானுக்கே சேரும்.  இந்த இசை மேதை திரை துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகி இருக்கும் வேளையில், இந்த வெள்ளி விழாவை அவரின்  பிறந்த நாளோடு திரும்பி பார்க்கும் ஒரு தருணமாக ‘சிறந்தவற்றுள் சிறந்தது ஏ.ஆர் ரஹ்மான் 25” எனும் அவரின் பாடல் தொகுப்பை தொகுத்து வழங்குகிறோம். 1992 முதல் 2017 வரையிலான பாடல்களில்  மூழ்கியெடுத்து 25 தமிழ் பாடல்களின் ஒரு சிறிய தொகுப்பு இது.  வழக்கமான பாடல்களில் இருந்து நிச்சயம் இது வேறுபடும் என்று நம்புகிறோம்.

1. தமிழா தமிழா – ரோஜா – 1992

கார் ஷெட் ஸ்டூடியோவுக்குள் மணிரத்னம் முதலில் கேட்ட ட்யூன் ”சின்ன சின்ன ஆசை”தான். கே.பாலச்சந்தர் முதலில் கேட்டு விட்டு ‘Its going To Be Song of The Decade” என்று சிலாகித்த பாடல் இது. ஆனால், தமிழால், உணர்வால், இதயத்தால், உயிரால் கலந்திருக்கும் இனப்பற்றை நாடி நரம்புகளில் ஏற்றி அழகு பார்த்த இந்த பாடல் யுகங்கள் கடந்தும் தாண்டி நிற்கும் என்பது சத்தியம்.

2. சிக்குபுக்கு  சிக்குபுக்கு ரயிலே- ஜென்டில்மேன் – 1993

ரோஜாவை அடுத்து மிகப்பெரிய வெற்றி ‘ஜென்டில்மேன்’.    நடன இயக்குன சுந்தரம் மாஸ்டரின் மகன் பிரபுதேவாவை இதுவரை கிராமத்து தெம்மாங்கு பாடல்களில் ஆட வைத்து பார்த்த சினிமாவை மேற்கத்திய இசையில் ஆடவைக்க தீர்மானித்தார் புதிய இயக்குனராக அறிமுகமான சங்கர். அந்த மெனகெடலுக்கு கிடைத்த வெற்றிதான் அந்த பாடல்.  அதிலும் கவிஞர் வாலியும் ஏ.ஆரும் சேர்ந்த முதல் பாடல் இது.  இன்று கேட்டாலும் இந்த பாடல் இன்று வெளிவந்தது போல உணர்வையே நமக்குள் ஏற்படுத்துகிறது.

3. மானூத்து மந்தையிலே – கிழக்குச் சீமையிலே – 1993

ஏ.ஆர் ரஹ்மான் நவீன இசைக்கு மட்டும்தான் சொந்தக்காரர். மண் வாசனையெல்லாம் அவருக்கு வராது என்ற வாய்களுக்கு பூட்டுப்போட்ட படம்தான் கிழக்குச் சீமையிலே. பிழிய பிழிய அழவைக்கும் அண்ணன் தங்கை உறவை இசையில் ஈரமாக்கி நமது இதயத்தில் சேர்த்தார் ஏ.ஆர். தாய்மாமன் சீரின் பெருமை இந்த பாடல் முழுக்க மணக்கும்.

4.  ராசாத்தி என்னுசுரு என்னதில்ல – திருடா திருடா – 1993

ஒரே ஆண்டில் 5 படங்களுக்கு இசையமைத்த ரஹ்மானுக்கு,  இதில் மணிரத்தினத்தின்  அடுத்த அடுத்த படமான ‘திருடா திருடா ‘ சூப்பர்  ஹிட்.  அதிலும் வாத்தியங்களே இல்லாத ‘ராசாத்தி’ பாடல் வெறும் கோரஸ் மூலம் மட்டுமே மெட்டமைக்கப்பட்டு இன்றும் நம்மை கட்டிப்போட்டுள்ளது.  இதற்கு ரஹ்மானோடு சேர்ந்து மிகவும் கஷ்டபட்டவர் பாடல் ஆசிரியர் வைரமுத்து.

5. செந்தமிழ் நாட்டு தமிழச்சியே – வண்டிச்சோலை சின்ராசு – 1994

இந்த படம் தோல்வி பட்டியலில் சேர்ந்தாலும், ரஹ்மானின் இசையில் பாடல்கள் வெற்றிபெற்றன. மெல்லிசை காதல் பாடல்கள் மனதை ஈர்த்தாலும், இன்றளவும் பேசப்படுவது சாகுல் ஹமீது குரலில் ஒலித்த ‘செந்தமிழ் தமிழ் நாட்டு தமிழச்சியே’ பாடல்தான். பாடல் தொடங்கும் இசையும், கலாச்சார வார்த்தை பின்னலும் பாடலை அதிகம் நம்மை ரசிக்க வைக்கும். இவரா புகழ் பெற்ற அந்த மனிதனின் குரலில் ஒலித்த இந்த பாடலின் புகழ் என்றுமே நிரந்தரம்தான்.

6.  என்னவளே – காதலன் – 1994

1994-ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் ஏ.ஆர் ரஹமானுக் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் காதலன். இந்த படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். அனைத்துமே நமக்கு பிடித்த விதம். குறிப்பாக,  கர்நாட இசைப்பாடகர் உன்னிகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்தார். அவரின் அருமையான மெல்லிசையின் மூலம் தேசிய விருதையும் பெற செய்தார்.

7.  உயிரே உயிரே –  பாம்பே- 1995

இசையின்  மூலம் ஆண்டுக்கு ஆண்டு ரஹ்மானின் புகழ் ஓங்கியது.  இதற்கு முன்பு சில பாடல்களில்  மட்டும் ஓரிரு வரிகள் பாடிவந்த ரஹ்மான். முதன் முறையாக இந்த படத்தில்தான் ‘அந்த அரபிக் கடலோரம்’ என்ற முழுபாடலைப் பாடி, பாடகராக உதயமானார்.  இதில் ஒலித்த மற்றும் ஒரு பாடலான  ‘கண்ணாளனே’ பெரிய ஹிட் என்றாலும், ‘உயிரே பாடலுக்கு நிகராக ஒரு காதல் பாடல் இருக்க முடியாது என்ற மாய நிலையை, ஹரிஹரன் சித்ரா குரலில்  இன்றும் அந்த பாடல் ஏற்படுத்தி வைத்துள்ளது.

8.  மலர்களே – லவ் பேர்ட்ஸ்- 1996

மீண்டும் சித்ராவின் குரல். தொண்ணூறுகளில் சித்ராவின் குரலை வைத்து ரஹ்மான் செய்த பல நல்ல விசயங்களில் இதுவும் ஒன்று. போதாதற்கு கூடவே ஹரிஹரனையும் சேர்த்துக்கொண்டு இந்த பாடல் முழுவதும் மலர்களின் ஸ்பரிசம். ‘உருகியதே… எனதுள்ளம்’, ‘உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா’ போன்ற வரிகளின் perfectionஐ எழுத்தில் அடக்க முடியாது. இதே ஆண்டு வந்த ‘இந்திரா திரைப்பாடகளும்  இந்த பட்டியலில் தவிர்க்க முடியவில்லை.

9. ஒருநாள் ஒரு பொழுது – அந்திமந்தாரை – 1996

அழுகையையும், சிரிப்பையும், தனிமையும், இன்மையையும் இரவு பகல் ஒளி இருட்டு என்ற எந்த பாகுபாடுமில்லாமல் ஒரு குரல் நம் செவிகளில் பாய்ச்சுமென்றால் அது நிச்சயம் ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்க முடியும். காலத்தின் சூழ்நிலையால் பிரிந்து சென்றவள் பல ஆண்டுகளுக்குப்பின் யாருக்காக காத்திருக்கிறோமோ அவனையே சந்திக்க நேரும்பொழுது வார்த்தைகள் தவிக்க கண்ணீர் மட்டுமே வார்த்தைகளாக மாறும்போது வரும் வைரமுத்துவின் வரிகள்.

10.  தங்கத் தாமரை மகளே- 1997

தமது 30-வது வயதில் ரஹ்மானுக்கு இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுத் தந்த பாடல் இது.  அதுமட்டும் இல்லாமல் இதற்கு முன்பு எஸ்பி பாலாவுக்கு தேசிய விருதுகள் கிடைத்தாலும், தமிழ் முதன் முதலாக இந்த பாடலுக்குதான் அவர் தேசிய விருதைப் பெற்றார்.  கத்தி மேல் நடப்பது போன்ற வார்த்தைகளுக்கு இருவரும் பதம் பதம் பார்த்து இசையோடு குரல் சேர்த்ததால் இந்த விருதும் சாத்தியாமானது.

11.  நறுமுகையே – இருவர் – 1997

புதுமையான வடிவம், ஒலிப்பதிவு தரம், காட்சியமைப்பு பின்னணி இசை எல்லா நிலைகளிலும் ரஹமான் புகழ்பெற்றார்.  இருந்தும் விமர்சனங்கள் ரஹ்மானை திறமையை சோதித்துக்கொண்டே வந்தன.  மணிரத்திரனம் என்றால் ரஹ்மான் இசை என்ற முத்திரை ஆழமானது. இருந்து இரு பெரும் தலைவரகளின் அரசியல் சாசனத்தை கூறிய இந்த படத்திற்கு ரஹ்மான் நியாயம் செய்வாரா என்ற கேள்விக்கு, ஒவ்வொரு பாட்டுக்கும் காட்சிக்கும் தனிதனியே நியாயம் செய்து அசத்தினார். ஏ.ஆர். அதிலும் கருப்பு வெள்ளை காட்சியில் வரும் இந்த பாடல் இன்றும் நம் மனதில் தங்கும்.

12. முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் – சங்கமம் – 1999

1999ம் ஆண்டு ஒரு கொண்டாட்டமான ஆண்டு. சங்கமம், ஜோடி,தாஜ்மஹால், காதலர் தினம், என் சுவாசக்காற்றே என அத்தனையும் சுப்பர் ஹிட் ஆல்பம். சுஜாதாவின் குரலில் இந்த ‘முதல் முறை’ பாடல் கொஞ்சம் அதிகமா மனதில் இடறியது. வாத்தியங்களின் இசைக்கோர்ப்புக்கு இந்த பாடல் மிகப்பெரிய முத்திரை. ‘மழையுண்டு மேகமில்லை’ க்கு பிறகு வரும் புல்லாங்குழலில் அதே மழை பெய்துகொண்டே இருக்கும். ‘சலங்கையே கொஞ்சம் பேசு’ என்று வருவது ஸ்ரீனிவாஸ் மழை. ‘குளிருது குளிருது (தாஜ்மஹால்), வெள்ளிமலரே (ஜோடி) இரண்டும் கூடுதல் சந்தோஷங்கள்.

13. கலகலவென – ரிதம்- 2000

ஐம்பூதங்களின் சாரம் சொல்லும் ரிதம் பட பாடல்களில் ஆகாயத்துக்கான பாடல் இது. நீரின் பாயலை ‘நதியே’ பாடலில் சொல்வது போல மேகத்தின் பயணங்களை இசையில் பூட்டும் இந்த பாடலில் இருக்கும் மழைமேகம் சாதனா சர்கம்.

14. சட்டென நனைந்தது நெஞ்சம் – கன்னத்தில் முத்தமிட்டால்- 2002

சுஜாதா வார்த்தைகளாகவும், வைரமுத்து கவிதையாகவும், ரஹ்மான் இசையாகவும் சொல்வதை மணிரத்னம் ஒரு சிறுகதையாக காட்சியில் பதிவு செய்த பாடல் இது. வெள்ளைப்பூக்கள், விடைகொடு எங்கள் நாடே போன்ற பிரம்மாண்டங்கள் இருந்தாலும் இந்த சிறிய தூறல் தரும் இதத்தில் சட்டென நனையும் நெஞ்சம்.

15. உந்தன் தேசத்தின் குரல் – தேசம்- 2004

ரஹ்மானின் குரலுக்கு தனி அடையாளம் இருக்கிறது. மலைக்கு மீது நதியாய் இருக்கும் நீர் அருவியில் விழுந்து மீண்டும் நதியாகும். நதி-அருவி-நதி இந்த மூன்று நிலைகளுக்கும் குரல் கொடுக்க ரஹ்மானால் முடியும். அதில் ஒருவகை இந்த பாடல். ‘சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா.. தமிழா” வரிகள் ரஹ்மானும் வாலியும் தெரிவார்கள்.

16. முன்பே வா – சில்லுனு ஒரு காதல்- 2006

ரஹ்மான் இசையில் மற்றோரு பனித்துளி இந்த பாடல். காதல் பாடல்கள் பட்டியலில் இந்த பாடல் நிச்சயம் இல்லாமல் போகாது.  வாலியின் வரிகளில்  இசையும் அதன் போக்கும் மெல்லிசையின் னாழம்.  ரஹ்மானின்  இந்த வருடத்துக்குக்கான போனஸ் வரலாறு படத்தின் ‘இன்னிசை அளபெடையே’ மற்றும் காற்றில் ஓர் வார்த்தை” போன்றவை.

17. ஏய் மாண்புறு மங்கையே – குரு – 2007

இசையை நகர்த்தி சொல்லவேண்டியது தான் வரிகள் என்று திண்ணமாய் நம்புபவர் மணிரத்னம். அந்த நம்பிக்கையின் மிகப்பெரும் சாட்சி இந்த பாடலின் வரிகளும் இசையும். ஸ்ரீனிவாசும், சுஜாதவும் சேர்ந்து இந்த பாடல் முழுவதும் சக்தி குடும்பத்து சுஜாதாவை குரலில் செதுக்கியிருப்பார்கள். குரலின் உளி – வைரமுத்து, ஒலி – ரஹ்மான்.

18. காட்டுச்சிறுக்கி – ராவணன்- 2010

எப்பொழுதுமே பாடல்களின் தேவையை நன்குணர்ந்த இயக்குனர் மணிரத்னம். உசுரே போகுதே போன்ற பாடல்கள் இருந்தாலும் இந்த பாடலையும் வீராவின் கதை சொல்ல பயன்படுத்தியிருப்பார் மணிரத்னம். அனுராதா ஸ்ரீராமின் தவிர்க்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. இதன் ஹிந்தி பதிப்பை சமீபத்தில் ஸ்ருதிஹாசனின் குரலில் மீள்வெளியீடு செய்திருந்தார் ரஹ்மான்.

19. மூங்கில் தோட்டம் – கடல்- 2012

வைரமுத்துவின் கவிதைக்கு உயிரூட்டிய இசை. ‘இது போதும் எனக்கு’ என்று கவிதையிலிருந்து இசைக்குதோதுவான வரிகளை வைரமுத்து இல்லாமலே தேர்வு செய்து அதை பாடலாக்கியிருந்தார் ரஹ்மான். பல நாட்கள் கழித்து ஹரிணியை மீண்டும் அழைத்து வந்த பாடல்.

20. நேற்று அவள் இருந்தாள் – மரியான் – 2013

பிரிவில் வாடும் காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் நினைவுகளை அடுக்குககளாக சொல்லும் பாடல். வாலி மறைந்த பிறகு வெளியான வாலி-ரஹ்மான் பாடல் இது. “வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா” என்று விஜய் பிரகாஷ் பாடும்பொழுது வாலி-ரஹ்மான் இணைந்த நேற்றுகளை மீண்டும் வரச்சொல்வது போல தோன்றும்.

21. இதயம் – கோச்சடையான்- 2014

கடினமான பாடல்களை சின்மயிக்கு கொடுத்து ரஹ்மான் சவால்விடுவது வெளியில் தெரியாத அழகிய இயல்புகளில் ஒன்று. அப்படியொரு வித்தியாசமான பாடல். ஸ்ரீநிவாஸையும் இணைத்து ‘யானோ நின்னை மறக்கிலேன்’ என்று உச்சத்தை இலகிய குரலில் ஒலிக்க வைத்தார் ரஹ்மான்.

22. நானே வருகிறேன் – ஓ காதல் கண்மணி – 2015

ரஹ்மானின் சமீபகாலத்து petடான சத்யப்ரகாஷ் ரஹ்மானுக்கு பாடிய முதல் பாடல். ‘சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே’ என்று பாடுவதாகட்டும், சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்லத்தெரியாதே’ என்று பாடுவதாகட்டும் அதில் ரஹ்மானின் விரல்கள் தெரியும். தொடக்கத்தில் ‘சொல்லுதே’ என்ற ஒரு சொல்லில் ‘ல்’ எனும் ஒற்றெழுத்தை ஒலிக்க வைக்கும் ரஹ்மானின் அழகியலுக்கு ஷாஷா பொருத்தமான தேர்வு. ‘நானே வருகிறேன்’ல் ‘நானே’ ஒரு வளைந்தோடும் நதி.

23.  அவளும் நானும் – அச்சம் என்பது மடமையடா – 2016

‘அச்சம் என்பது மடமையடா’ தான். அந்த முழுவாழை இசைவிருந்தின் பதம் பார்க்கப்படும் சோற்றுப் பருக்கை தான் இந்த ‘அவளும் நானும்’. ரம்மியம் என்பதன் பொருள் இந்த பாடலில் ஒலிக்கும் விஜய் யேசுதாஸின் குரல் தான். வேறொரு குரலை நினைத்துப்பார்க்க முடியாத அவளில் அந்த பாடலின் குரல் இன்னும் அகலாது இருக்கிறது.

24. வான் வருவான் – காற்று வெளியிடை – 2017

ரஹ்மானின் சமீபத்திய பழைய ரஹ்மான். ஷாஷாவின் குரல் வைரமுத்துவின் வரிகள் என்று ரஹ்மானின் வெள்ளை நிறத்தில் வந்த பாடல். திரும்பி பார்க்கும் தருணத்தில் உண்மையிலேயே ரஹ்மானின் திறமையை மீண்டும் நிரூபித்த பாடல்.

25.  ஆளப்போறான் தமிழன் – மெர்சல் – 2017

தமிழனத்தின் பெருமைகளை பாடல் சேர்க்கும் போது, அந்த பாடல் உச்சத்தை தொடுவது இயல்புதான். ஆனால் அந்த மாஜிக் தமிழா தமிழா பாடலுக்கு பின் ஏற்படாமல் போனது வருத்தம்தான். இந்நிலையில் மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் காலம் கடந்து நிற்கும் வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக அன்பை கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம் மகுடத்தை தரிக்கிற ழகரத்த சேர்த்தோம் என்ற வரி தமிழனின் பெருமையை பாடியது. பெயருக்கு ஏற்றார் போல இசையும் படத்தில் மெர்சல்தான்.

”உண்மையில் சினிமாவில் நான் என்னவெல்லாம் சாதிக்க நினைத்தேனோ, அது எல்லாம் என் முதல் படத்திலேயே கிடைத்துவிட்டது. நான் உருவாக்கும் இசை அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன் , அந்த லட்சியத்தையும் அடைந்தேன்”. இப்படி கூறிய ரஹ்மான் 25 ஆண்டுகள் கால் பதித்துவிட்ட்டார்.  25 வெறும் எண் தான். ரஹ்மானின் பாடல்களில் சிறந்தவையென பிரித்து எடுப்பது நனையாமல் பெருங்கடலிலை நீந்தி வருவது போலாகும். இன்னும் இந்த இசைப்பெருங்கடலில் மூழ்கி முத்தெடுக்க வரும் காலங்களிலும் சிறந்த பாடகள் அமைய எங்களின் இனிய வாழ்த்துகள் ரஹ்மான்ஜி !!