மக்களுக்காகவே வாழ்வேன்- ரஜினி! அரசியலில் நாங்கள் களமிறங்கினோம்! – கமல்

கோலாலம்பூர், ஜன. 7-

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் மை ஹிவன் இண்டர்நேஷனல் மேற்பார்பையில் நட்சத்திர விழா புக்கிட் ஜாலில் அரங்கில் மிகக் கோலாகலமாக நடந்து முடிந்தது. குறிப்பாக நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரை மேடையில் ஏற்றி, பன்முகக் கலைஞர் விகேக்கை வைத்து, நேர்காணல் செய்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இவன் யார் என்று தெரிகின்றதா? என்ற பாடலின் மூலம் மேடை ஏறினார் கமல்ஹாசன். அவரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் கமல்ஹாசன் துளி அளவும் தயக்கம் காட்டவில்லை. அரசியல் ஆன்மீகம் என அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தார்.

அதில் டுவிட்டரில் முன்னிலை வகிக்கும் அவரின் கருத்து பதிவேற்றம் குறித்து விவேக் கேட்டார். அதற்கு தமது டுவிட்டர் சில தமிழர்களுக்குப் புரியாமல் இருப்பதே சிறந்தது என்றார். அதோடு அது மக்களின் மனவோட்டங்களின் வெளிப்பாடுதான் என்றார்.

மதத்திற்கு எதிரானவர் நீங்கள், வயது கடந்த பிறகு ஆன்மீகம் மீது ஈடுபாடு உண்டாகியுள்ளதா? இதற்கு நான் யானையாக இருந்தாலும் மதம் பிடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன் என அவர் தெரிவித்தபோது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

நீங்கள் பேசிய வசனத்தில் உங்களை கவர்ந்தது எது என்ற கேள்விக்கு, நான் பேசியதை விட நான் எழுதிய வசனத்தை நடிகர் திலகம் சொன்னாரே, விதை நான் போட்டது என்ற வசனம் மறக்க முடியாதது என்றார் கமல்.

அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது, தாம் அரசியலில் ஈடுபட வேண்டுமென ஒருநாளும் நினைத்ததில்லை. இப்போது இருக்கும் அரசியல் சூழல் ‘நாங்கள் அரசியலில் களமிறங்க காரணமாக அமைந்தது என்றார். இறுதியாக மக்களை பார்த்து, நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல திறமையை என்று கூறியபோது, அரங்கமே மீண்டும் அதிர்ந்தது.

இதோடு விடைபெற்றார் கமல்ஹாசன். அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, விவேக் வரவேற்ற விதம் அபாரம். பின்னணி இசை ஒலிக்க தமக்கே உண்டான ஸ்டைலோடு மேடை ஏறினார் சூப்பர் ஸ்டார். ரசிகர்களின் உற்சாகக் குரல் அவர் பேசும் வரை நிற்கவே இல்லை.

மேடையில் தோன்றிய பழம்பெரும் நடிகை லதா, ரஜினிக்கு சரித்திர நாவலை பரிசாக வழங்கி, காதலித்த அனுபவம் உண்டா என வினவினார். அதற்கு ரஜினி, முதல் காதல் பலருக்கு கைகூடும். பலருக்கு கைகூடாது. எனக்கு கைகூடவில்லை என்றார். பெயர் நினைவில் உள்ளதா? என்று கேட்டதற்கு, முதல் காதலின் பெயரை எப்படி மறக்க முடியுமென்று கூறியவர், அந்த பெயரை கூற முடியாது என்றார்.

விவேக் தமது கேள்வியைத் தொடங்குவதற்கு முன், நான் கமல்ஹாசன் இல்லை என்றார் ரஜினி, கமலிடம் கேட்கப்பட்ட அதே கேள்விகள்தான்.

மலேசியாவிற்கு முதன் முதலில் வந்த அனுபவத்தை ரஜினி பகிர்ந்து கொண்டார். கமல் முன்னணி நடிகராக இருந்தபோது, எங்கு சென்றாலும் தம்மை அழைத்துச் செல்வார் என கூறினார். பல இரவுகள் தூக்கம் இல்லாமல் கழிந்ததாக க்கூறிய அவர், இயக்குநர் பாலசந்தரை காலையில் சமாளிக்க முடியாமல் திணறியதையும் தெரிவித்தார். அன்று தொடங்கிய மலேசிய உறவு. இன்று இரண்டாவது வீடாக மாறிவிட்டது.

தாம் கர்நாடகத்தில் கன்டெக்டராக இருந்தபோதும் வேகமாகச் செயல்பட்டதாகக் கூறினார். குறிப்பாக அந்த சமயத்தில் தலையில் நிறைய மூடி இருந்தபோது, அதை கோதி விட்டு டிக்கெட் டிக்கெட் என தாம் முன்னோக்கி சென்றதாகக் கூறினார். அதுதான் தமது வாழ்க்கையை மாற்றி அமைத்ததாகவும், பாலசந்தர் எந்தச் சூழ்நிலையிலும் இந்த ஸ்டைலை விட்டுவிடக்கூடாது என்றார்.

வாழ்க்கையில் குறைந்தபட்ச ஆசை என்ன? அதிகபட்ச ஆசை என்ன? என்ற கேள்விக்கு 2 அறைகள் கொண்ட ஒரு சின்ன வீடு, ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்று நினைத்தேன். அதிகபட்ச ஆசை என்பது, என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்பதுதான் என்று அவர் கூறிய தருணம். அரங்கத்தில் கரவொலியைத் தவிர வேறு எதும் கேட்கவில்லை.

இந்த நிகழ்ச்சியில் ஆன்மீகம் பேசும் ரஜினி கருப்பு உடையிலும் பகுத்தறிந்து பேசும் கமல் வெள்ளை உடையிலும் வந்தது, அரசியல் பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்தியது.

பின்னர் கமல்ஹாசனும் மேடை ஏறி, இருவரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இந்த பிரமாண்ட நிகழ்ச்சி இடைவிடாது 12 மணி நேரம் நடந்ததால் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததாக ஏற்பாட்டாளர் ஷாகுல் அமிட் தெரிவித்தார். நிகழ்ச்சி வெற்றி பெற உதவிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.