கோலாலம்பூர், ஜன.8-
வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால் அக்கூட்டணியின் பிரதமராக துன் டாக்டர் மகாதீர் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்நாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ம.இ.கா.வின் இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் தெரிவித்தார்.

கடந்த 22 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில் அவர் இன அடிப்படையிலான கொள்கைகளைக் கொண்டு வந்ததே இதற்கு காரணம் என அவர் கூறினார்.

இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் கொண்டிருந்த பொருளாதார கட்டம் கட்டமாக தன்னுடைய 22 ஆண்டுகால கொள்கைகள் வாயிலாக சீரழித்துவர் துன் மகாதீர் என்பதை இந்தியர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவரது இத்தகைய கொள்கைகள் மீதான அதிருப்திகள்தான் கடந்த 2007ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் வாயிலாக சாலை பேரணிக்கு வழி வகுத்தது என இன்று வெளியிட்ட தமது அறிக்கையின் வாயிலாக சிவராஜ் குறிப்பிட்டார்.

துன் மகாதீரின் காலத்தில்தான் இந்திய மருத்துவர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. இந்தியர்கள் அதிகம் ஜொலித்த காப்புறுதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது. அதோடு, இந்தியர்களுக்கான பொருளாதார வாய்ப்புகள் குறைக்கப்பட்டது. இந்தியர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த நிபுணத்துவ துறைகளில் இவரது இனவாத கொள்கைகள் காரணமாக இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து பொருளாதாரத்திலும் வெகுவாக பின்தங்கினர். தனது 22 ஆண்டுகால ஆட்சியில் இந்திய சமூகத்திற்கு பெரிதாக உதவவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இம்முறை சேவை செய்வதற்கு வாய்ப்பு கோருகிறார்.

தேசிய முன்னணியில் இந்தியர்களின் பிரதிநிதியாக ம.இ.கா. இருந்த போதே உதவிகள், நிதி முதலானவற்றை இந்திய சமூகத்திற்கு கிடைப்பதை உறுதி செய்யாத அவர், தற்போது நம்பிக்கைக் கூட்டணியில் அச்சமூகத்தைப் பிரதிநிதிக்கும் எந்த கட்சியும் இல்லாத நிலையில் எப்படி உதவிகளை வழங்குவார்?

அதோடு, ஞாயிறன்று நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் மாநாட்டில் உரையாற்றிய துன் மகாதீர் தமது உரையில் பெரும்பாலும் பூமிபுத்ரா குறித்த அரசியல் தடத்தைப் பற்றிதான் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். ஆனால், பொருளாதார அடிப்படையில் வறுமையில் இருக்கும் இந்திய சமூகத்தைப் பற்றி அவர் பேசவில்லை. துன் மகாதீரின் இனவாத கொள்கைகளால் இந்திய சமூகம் பின்தங்கியுள்ளது.

இந்திய சமூகத்தின் பிரச்னைகளைக் களைவதற்கான நடவடிக்கையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக எம்.ஐ.பி. எனப்படும் இந்திய சமூகத்திற்கான வியூக பெருந்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். ஆகையால், எதிர்காலம் தொடர்பில் துன் மகாதீர் வழங்கும் வாக்குறுதிகளை நம்பி இந்திய சமுதாயம் ஏமாற வேண்டாமென டத்தோ சிவராஜ் வலியுறுத்தினார்.