முகப்பு > மற்றவை > 7 தமிழ்ப்பள்ளிகளுக்கு பிரதமரின் கூடுதல் சிறப்பு நிதி!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

7 தமிழ்ப்பள்ளிகளுக்கு பிரதமரின் கூடுதல் சிறப்பு நிதி!

புத்ரா ஜெயா, ஜன.8-
புதிய கட்டடம் மற்றும் வகுப்பறைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சார்பில் 7 தமிழ்ப்பள்ளிகளுக்கு 110,000 வெள்ளி சிறப்பு நிதியாக வழங்கப்பட்டது. இந்நிதியைப் பிரதமர் நஜீப்பின் சார்பில் ம.இ.கா.வின் தேசியத் தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அப்பள்ளிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோஸ்ரீ சுப்ரமணியம் கூறுகையில், ஒரே மலேசியா மக்கள் அறவாரியத்தின் நிதியுதவியின் வாயிலாக பாலர்ப்பள்ளி கட்டும் திட்டத்தின் கீழ் 7 தமிழ்ப்பள்ளிகளுக்கு இதன் முன்னர் 18 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது கூடுதல் நிதியாக 60,000 வெள்ளி 6 தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படுவதாக கூறினார்.

சம்பந்தப்பட்ட 6 தமிழ்ப்பள்ளிகளிலுள்ள பாலர்பள்ளிகள் தங்களுக்கு தேவையான தளவாட பொருள்களை வாங்கும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் 10,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. பேராக்கில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி, நெகிரி செம்பிலானிலுள்ள புக்கிட் மெர்த்தாஜாம் தமிழ்ப்பள்ளி, கெடாவில் லாடாங் ஹென்ரித்தா தமிழ்ப்பள்ளி ஆகியவற்றிலுள்ள பாலர்பள்ளிகள் கட்டப்பட்டு விட்டன. கூடிய விரைவில் அவை இயங்கவுள்ளது. அதேவேளையில், நெகிரி செம்பிலானிலுள்ள லாடாங் செனாவாங் தமிழ்ப்பள்ளி, ஜொகூரிலுள்ள பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளி, பினாங்கிலுள்ள சுப்ரமணியபாரதி தமிழ்ப்பள்ளி ஆகியவற்றில் பாலர்பள்ளிகள் இன்னும் கட்டப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ சுப்ரமணியம் கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பெர்சியாரான் ராஜா மூடா மூசா தமிழ்ப்பள்ளிக்கு 5 மாடிகள் கொண்ட கட்டடத்தைக் கட்டுவதற்காக 12 லட்சம் வெள்ளியைப் பிரதமர் நஜீப் ஒதுக்கீடு செய்த நிலையில் தற்போது கூடுதலாக 50 ஆயிரம் வெள்ளி சிறப்பு நிதி வழங்கப்படவிருக்கின்றது. கடந்தாண்டு நாடு தழுவிய நிலையிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் 50 பாலர் பள்ளிகளைக் கட்டுவதற்காக 1 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆயினும், பாலர்பள்ளியில் மாணவர்கள் நுழைவதற்கு இந்நிதி பற்றாக்குறையாக இருந்தது.

இந்நிலையில், குறுகிய கால நடவடிக்கையாக அரசாங்கம் செடிக் வாயிலாக அரசு சார்பற்ற இயக்கங்களின் உதவியுடன் பாலர்பள்ளிகளை நடத்தியது. பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை வழங்கும் வகையில் ஓர் ஆண்டுக்கு 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் வாயிலாக கூடுதலாக 7,000 மாணவர்கள் பாலர்பள்ளியில் தங்களின் தொடக்கக்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். இந்நிகழ்ச்சியில் துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன், செடிக்கின் தலைமை இயக்குநர் பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ்.கிருஷ்ணன் முதலானோர் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன