கோலாலம்பூர், ஜூலை 24-

இப்போது தொடங்கியுள்ள இரண்டாம் தவணை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அரசாங்கம் முன்மொழிந்துள்ள தொழிலாளர் காப்புறுதித் திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பி.எஸ்.எம். கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் வான் ஷாம் ஷைடி வான் ஷாஹிட் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

பி.எஸ்.எம். கோரும் வேலை இழப்பு நிதி, அரசாங்கத்தின் தொழிலாளர் காப்புறுதி திட்டத்திற்குச் சமமான ஒன்று. நாங்கள் அரசாங்கத்தின் இந்த முயற்சியை வரவேற்பதுடன், அதை விரைவில் அமலுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என வான் ஷாம் ஷைடி தெரிவித்தார். நாட்டின் தற்போதைய மந்தமான பொருளாதார சூழ்நிலையில், இந்தத் தொழிலாளர் காப்புறுதி திட்டம் தொழிலாளர்களுக்கு மிக முக்கியமான பாதுகாப்பாக அமைகிறது.

கடந்த 2 வருடத்தில், மலேசியாவில் பல நிறுவனங்கள் வியாபாரத்தில் திவாலாகி, தொழிலை இழுத்து மூடியிருக்கின்றனர். இதில், 30% தொழிலாளர்கள் எவ்வித நஷ்டஈடும் கொடுக்கப்படாமல் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திடீர் வேலை இழப்பினால் அவர்களின் வாழ்க்கை நிலை மாறிப் போனாது, சுமையும் கூடி போனது.

இந்தத் தொழிலாளர் காப்புறுதி திட்டத்தின் வாயிலாக வேலை இழந்த தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு சிறு நம்பிக்கை ஒளி பிறக்கும். அரசாங்கம் கொண்டு வரும் இத்திட்டத்தில், வேலை இழந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை சிறு உதவித் தொகை கொடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு புது வேலைக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்படும், என அவர் மேலும் விளக்கினார்.

கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழிலாளர் காப்புறுதி திட்டம் இம்முறை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வாசிப்புக்குக் கொண்டு வரப்படும் என மனிதவள அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார்.
மேலும், இந்த வருடம் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டு, ஜனவரி 2018-ல் அமலுக்கு வரும் எனவும் உறுதியாகக் கூறியிருந்தார். எனவே, அமைச்சர் அவர் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவார் என தாம் பெரிதும் நம்புவதாக வான் ஷாம்ஷைடி கூறினார்.