அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > கோப்பா டெல் ரே – காலிறுதியில் வலென்சியா, அத்லேட்டிக்கோ மெட்ரிட் !
விளையாட்டு

கோப்பா டெல் ரே – காலிறுதியில் வலென்சியா, அத்லேட்டிக்கோ மெட்ரிட் !

பார்சிலோனா, ஜன.10 –

ஸ்பெயின் கோப்பா டெல் ரே கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு வலென்சியாவும், அத்லேட்டிக்கோ மெட்ரிட்டும் தகுதி பெற்றுள்ளன. செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அத்லேட்டிக்கோ மெட்ரிட் 3- 0 என்ற கோல்களில் லெய்டா அணியை வீழ்த்திய வேளையில், வலென்சியா 4 – 0 என்ற கோல்களில் லாஸ் பல்மாஸ் அணியை வீழ்த்தியது.

முதல் ஆட்டத்தில் 7 – 0 என்ற கோல்களில் வெற்றி பெற்றிருந்த அத்லேட்டிக்கோ மெட்ரிட், இரண்டாவது ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் முதல் பாதியில் கோல் அடிப்பதில் அத்லேட்டிக்கோ மெட்ரிட் திணறியது.

57 ஆவது நிமிடத்தில் அத்லேட்டிக்கோ மெட்ரிட்டின் முதல் கோலை யானி கராஸ்கோ போட்டார். 17 நிமிடங்களுக்குப் பின்னர் கேவின் கமேரோ போட்ட கோல், அத்லேட்டிக்கோ மெட்ரிட் 2- 0 என்ற கோல்களில் முன்னணியில் வைத்தது. அத்லேட்டிக்கோ மெட்ரிட்டின் மூன்றாவது கோலை விட்டாலோ போட்டார்.

இதனிடையே மெஸ்தால்லா அரங்கில் களமிறங்கிய வலென்சியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 30 ஆவது நிமிடத்தில் லுசியானோ வியேட்டோ , வலென்சியாவின் முதல் கோலைப் போட்டார். இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய 3 நிமிடங்களில் , வியேட்டோ இரண்டாவது கோலைப் போட்டார்.

நெமாஞ்சா மாக்சிகோவிச் மூன்றாவது கோலைப் போட்ட வேளையில், நான்காவது கோலைப் போட்டு, லுசியானோ வியேட்டா தனது ஹாட்ரீக் சாதனையை நிறைவு செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன