“கான கந்தர்வன்” கே.ஜே.யேசுதாஸ் பிறந்த நாள்!

0
3

இந்திய இசை உலகில் தவிர்க்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் கே.ஜே.யேசுதாஸ், இன்று இவருக்கு 77வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.  தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர் என்பதால் ரசிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்படுகிறார்.

இவரது முழுப்பெயர் ‘கட்டசேரி யோசஃப் யேசுதாஸ்’. ஜனவரி 10, 1940ம் ஆண்டு, தென்னை மரங்கள் செழித்து வளரும் கேரள மாநிலம் கொச்சினில் பிறந்தவர். இவரது பெற்றோர் அகஸ்டைன் யோசஃப், அலைஸ்குட்டி. யேசுதாஸின் 1960ல் கல்பாடுகள் என்னும் மலையாளத் திரைப்படம்தான் இவருடைய திரையிசைப் பயணத்தின் முதல்படி.

1960-ஆம் ஆண்டு திரையுலகில் தனது இசைப்பயணத்தை துவங்கிய யேசுதாஸ், சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை ஏழு முறை வென்ற ஒரே பாடகர் என்ற பெருமைக்குரியவர்.

1964ல் எஸ்.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பொம்மை’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடல், தமிழில் இவரது முதல்பாடல். ஆனாலும், கொஞ்சும் குமரி திரைப்படத்தின் ’ஆசை வந்தபின்னே’ முதலில் ரிலீஸ் ஆனது.

தொடக்கத்தில் ஒரு சில பாடல்களைத் தமிழ் திரைப்படங்களில் பாடியிருந்தாலும், 1974 ஆம் ஆண்டு,  ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் “விழியே கதையெழுது” என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. பிறகு எம். ஜி. ஆர் நடித்த “பல்லாண்டு வாழ்க” திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடி, தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அதில் “போய் வா நதியலையே” மற்றும் “ஒன்றே குலமென்று பாடுவோம்” பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது எனலாம். மேலும் ‘நீதிக்கு தலைவணங்கு’ திரைப்படத்தில், “இந்த பச்சைக்கிளிகொரு”, ‘டாக்டர் சிவா’ திரைப்படத்தில் “மலரே குறிஞ்சி மலரே”, இவரை தொடக்கத்தில் பிரபலமாக்கிய பாடல்கள் ஆகும்,.

சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதான “பத்ம பூஷன்” மற்றும் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டு க்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடி யுள்ளார்.

இந்திய இசை ரசிகர்களுக்காக பல அருமையான பாடல்களை கொடுத்த கான கந்தர்வன் கே.ஜே.யேசுதாஸ் பாடிய சில தமிழ் படப் பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.

முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற ‘செந்தாழம் பூவில் வந்தாடு தென்றல்..’

அவள் ஒரு தொடர்கதை படத்தில் இடம்பெற்ற ‘தெய்வம் தந்த வீடு..’

மூடி பணி’ படத்தில் இடம்பெற்ற ‘என் இனிய பொன் நிலாவே..’

ரெட்டை வால் குருவிகள் படத்தில் இடம்பெற்ற ‘ராஜ ராஜ சோழன் நான்..’ 

வாழ்வே மாயம் படத்தில் வரும் ‘வாழ்வே மாயம்..’

‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தின் ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு..’

சிந்து பைரவி படத்தில் வரும் ‘மகா கணபதிம்..’, ‘தண்ணி தொட்டி தேடி வந்த..’, ‘கலைவாணியே..’

தளபதி படத்தில் வரும் ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ளே ..’

மன்னன் படத்தில் இடம்பெறும் ‘அம்மா என்றழைக்காத..’

ராம் படத்தில் வரும் ‘ஆராரிராரோ நான் இங்கே பாட..’

இந்த 10 பாடல்களும் ஒவ்வொரு ரகத்தில் ஒவ்வொரு விதத்தில் அவர் பாடியிருக்கும் விதம் தனி அடையாளம் . திரையில் இந்த பாடல்களை எனக்கு பிடிக்காது என்று சொல்பவர்கள் நிச்சயமாக இருக்க முடியாது.  இன்று இவரின் சாயலோடு குரலோடும் அவரது மகன் விஜய் யேசுதாஸ் அப்பாவின் பெயருக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றார்.

‘மொழிகளுக்கும், எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது இசை மட்டுமே! அந்த வகையில் யேசுதாஸ் அவர்களின் தெய்வீகக் குரலில் ஒலித்த அத்தனைப் பாடல்களும், என்றென்றும் இசை ரசிகர்களின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கும்.  இந்த காந்தர்வ குரலோனுக்கு அனேகன்.காமின் அன்பு பிறந்த நாள் வாழ்த்து!