சிரம்பான், ஜன.11-
குடியுரிமை ஆவணங்கள் இல்லாததால் பள்ளியில் சேருவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவி டர்ஷனாவிற்கு பள்ளிக்கு செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறையின் சிறப்புப் அமலாக்கக் குழு நிர்வாகி ஜி.கே.ஆனந்தன் தெரிவித்தார்.

டர்ஷனாவைப் போல் உள்ள இதர மாணவர்களுக்கும் இன்னும் சில நாட்களில் பள்ளிக்குச் சென்று விடுவர் என அவர் கூறினார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் செய்யப்படும். இப்பிரச்னைக்கு முழுமையானத் தீர்வு காண்பதற்குத்தான் தற்போது நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

இதில் குடிநுழைவுத் துறை, தேசியப் பதிவுத் துறை, கல்வித் துறை போன்ற அரசு துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இதற்கு சிறிது காலம் பிடிக்கும்.  இதுபோன்ற சிறார்கள் தங்களின் அடிப்படைக் கல்வியை மேற்கொள்ள உறுதி செய்வதில் அரசு இணக்கம் கொள்வதாக மாநிலக் கல்வித் துறை அலுவலகத்தில் நடைபெற்றப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரணியத்தின் சிறப்பு அதிகாரியுமான ஆனந்தன் குறிப்பிட்டார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிரம்பானில் பிறந்த டர்ஷனாவை லோரி ஓட்டுநரான பி.கணேசன் (வயது46), அவரது மனைவி வி.மல்லிகா (வயது 48) ஆகிய இருவரும் தத்தெடுத்தனர். டர்ஷனாவின் சட்டப்பூர்வ பாதுகாவலர்களாக அவ்விருவரும் கடந்த 2015ஆம் தேதி அங்கீகாரம் பெற்றனர்.

ஆயினும், டர்ஷனா முறையான குடியுரிமை ஆவணங்களைக் கொண்டிருக்காத நிலையில் அவர் முதலாம் ஆண்டில் சேருவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் வைரலானது.