தத்துவவாதி சுவாமி விவேகானந்தருக்கு 155 வயது இன்று!

0
4

தன்னம்பிக்கை, சுயமரியாதை, முன்னேற்றம், எழுச்சி, ஆன்மீகம் இப்படியெல்லாம் கூறும்போது நமக்கு மொத்தமாக முதலில் நினைவுக்கு  வருபவது சுவாமி விவேகானந்தரின் முகம்தான். இன்று அந்த மாமனிதரின் 155-வது பிறந்த நாள்.

வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து இன்றும் போற்றப்படுகிறார். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர்.

சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர்.

ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த  தேசிய உணர்வைத் தூண்டியது. அது மட்டுமில்லாமல், இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்தார். சுவாமி விவேகானந்தர் கூறிய வாழ்க்கை மொழிகளை ”உன் எதிர்காலம் உன் கையில்” என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.

அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருப்பவற்றில் ஒரு பகுதியை அனேகம்.காம் வாசகர்களுக்காக இங்கே தொகுத்து அளிக்கின்றோம்.

வாழ்வில் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம். அவன் விசாலமான இதயம், பரந்த மனம், உயர்ந்த செயல் இவற்றைப் படைத்திருக்க வேண்டும். உலகத்தின் துயரையும் துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்காமல், அந்த உணர்ச்சியையும் அறிவையும் செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படுபவன்.

மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே தேவை. நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.

நமது உடல்கள், நமது குணங்கள், நமது அறிவு, நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஒருவர் வருகிறார். அவர் நன்கு கற்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது மொழி நடை அழகாக உள்ளது. அவர் ஒரு மணி நேரம் உங்களுடன் பேசுகிறார். ஆனால் சொன்னதில் பெரிதாக எதுவும் உங்கள் மனதில் பதியவில்லை.  இன்னொருவர் வருகிறார். ஒரு சில வார்த்தைகளே பேசுகிறார். அவை நன்றாக ஒழுங்குப்படுத்தப்படவும் இல்லை. ஒரு வேளை இலக்கணப் பிழைகளும் அதில் காணப்படும். ஆனால் அவர் சொன்னது பேரளவிற்கு உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது. உங்களுக்குள் பலரும் இதை அனுபவித்திருப்பீர்கள். எனவே ஒரு போதும் வார்த்தைகள் மட்டுமே மனத்தின் பதிவை உண்டாக்கி விடுவதில்லை, என்பது வெளிப்படை. வார்த்தைகள், ஏன், எண்ணங்கள் கூட ஒரு பதிவை உண்டு பண்ணுவதற்கு மூன்றிலொரு பங்கு சக்தியை மட்டுமே அளிக்கின்றன, மனிதனே மற்ற இரண்டு பங்கை அளிக்கிறான். மனிதனின் கவரும் ஆற்றல் என்று நீங்கள் குறிப்பிடுகின்ற அந்தச் சக்தியே வெளியேறி உங்களிடம் பதிவை உண்டாக்குகிறது.

நமது குடும்பங்களில் தலைவர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் வெற்றி பெறுகின்றனர். சிலர் பெறுவதில்லை. ஏன்? நாம் தோல்வியுறும்போது பிறரைக் குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்தக் கணமே, நமது தோல்விக்குக் காரணம் இவர்தான் என்று ஒருவரைக் காட்டிவிடுகிறோம்.

தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும், குற்றத்தைப் பிறர் மீதோ, பிற பொருளின் மீதோ, ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது, சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும் பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே, அவனது குணச்சிறப்பே, அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.

மனிதகுலத்தின் பெரிய தலைவர்களைக் கவனித்தால், அவர்களின் ஆளுமையே அவர்களைத் தலைவர்கள் ஆக்கியது என்பதையே எப்போதும் காண்போம். கடந்த காலத்தின் எல்லா நூலாசிரியர்களையும் சிந்தனையாளர்களையும் எண்ணிப் பார்ப்போம்.  உண்மையைச் சொல்வதானால், அப்படி எத்தனை எண்ணங்களைத்தான் அவர்கள் எண்ணிவிட்டார்கள்? கடந்த காலத்திலிருந்து மக்கள் குலத் தலைவர்கள் நமக்கு விட்டுச் சென்ற நூல்கள் அனைத்தையும் பாருங்கள்.

அவர்கள் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் மதிப்பிடுங்கள். இன்று வரை உலகில் நினைக்கப்பட்டுள்ள, புதிய, சொந்தமான உண்மைக் கருத்துக்கள் கையளவு மட்டுமே. அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற எண்ணங்களை அவர்களுடைய நூல்களில் படியுங்கள். அந்த நூலாசிரியர்கள் நமக்கு மாபெரும் மக்களெனத் தோன்றுவதில்லை. எனினும் அவர்கள் தங்கள் காலங்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
அவர்களை அவ்வாறு ஆக்கியது எது?

அவர்கள் சிந்தித்த எண்ணங்களோ, அவர்கள் எழுதிய நூல்களோ, அவர்கள் செய்த சொற்பொழிவுகளோ மட்டும் அல்ல, அப்போது இருந்து, இப்போது மறைந்துவீட்ட வேறு ஏதே ஒன்று, அதாவது, அவர்களது ஆளுமை. நான் முன்பு கூறியது போல், அவர்களின் ஆளுமை மூன்றில் இரண்டு பங்கு, அவர்களின் அறிவும் வார்த்தைகளும் ஒரு பங்கு. உண்மை மனிதன் அதாவது அவர்களின் ஆளுமையே நம்மை ஆக்கிரமிக்கிறது. நம் செயல்கள் விளைவுகள் மட்டுமே. மனிதன் உள்ளபோது செயல்கள் வந்தேயாக வேண்டும். விளைவு, காரணத்தைப் பின் தொடர்ந்தே தீரும்.

சுவாமி விவேகானந்தர் – உன் எதிர்காலம் உன் கையில்