அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பிரதமராக இருந்த காலத்தில் இந்தியர்களைக் கைவிட்டவர்தான் துன் மகாதீர்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பிரதமராக இருந்த காலத்தில் இந்தியர்களைக் கைவிட்டவர்தான் துன் மகாதீர்!

கேமரன்மலை, ஜன.13-
கடந்த 22 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்த துன் மகாதீர் காலத்தைவிட நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் காலத்தில்தான் இந்திய சமுதாயம் சிறப்பான அடைவுநிலையைப் பதிவு செய்திருப்பதாக மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

நாட்டின் 4ஆவது பிரதமராக 1981 முதல் 2003 ஆண்டு வரையில் இருந்த துன் மகாதீர், கல்வி, பொருளாதாரம் மற்றும் நாட்டின் மேம்பாட்டில் இந்திய சமூகத்தை அடிக்கடி கைவிட்டதாக அவர் கூறினார்.

இந்திய சமூகத்திற்கு தனது ஆட்சியில் துன் மகாதீர் ஒன்றும் செய்யாததால் அவரை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அக்கூட்டணி அறிவித்துள்ளதை இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்தினர் நிராகரிக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் மேம்பாடு, இந்திய தொழில்முனைவர்கள், ஆலயங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், அரசியல் கட்சிகள் முதலானவற்றில் இந்திய சமூகத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. ஒதுக்கியே வைத்திருந்தார் என கோலத்தெர்லா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள், நாள்காட்டிகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டான்ஸ்ரீ எம்.கேவியஸ் குறிப்பிட்டார்.

கேமரன்மலை வட்டாரத்திலுள்ள 8 பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவர்களுக்கு இந்த பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டது. நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீரும் துணைப்பிரதமர் வேட்பாளராக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவும் அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பில் வினவப்பட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக 92 வயதுடைய துன் மகாதீர் அறிவிக்கப்பட்டுள்ளது, அக்கூட்டணியின் தலைவர்களை துன் மகாதீர் முட்டாளாக்கியிருப்பதையும் அவர்களை வைத்து அவர் விளையாடுவதையும் காட்டுகின்றது. பல ஆண்டுகளாக துன் மகாதீர் சர்வாதிகாரமாக நாட்டை வழிநடத்தி வருவதாகவும் அவர் அப்பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டி வந்தனர். இப்போது அவரையே பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

ஓர் அரசியல்வாதி என்ற அடிப்படையில் என்னால் எதிர்கட்சிகளின் அடிக்கடி அரசியல் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும் போக்கு, நம்பகத்தன்மை முதலானவற்றை புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவர்களின் இத்தகைய தூய்மையற்ற அரசியல் விளையாட்டை மக்கள் பார்த்து வருவதாக டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன