லிவர்புல், ஜன.15 – 

2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் தோல்வியே காணத மென்செஸ்டர் சிட்டி கடைசியில் லிவர்புலிடம் மண்டியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் லிவர்புல் 4 –  3 என்ற கோல்களில் மென்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.

இந்த பருவத்தில் பிரீமியர் லீக் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மென்செஸ்டர் சிட்டி , 22 ஆட்டங்களில் தோல்வியே காணாமல் இருந்தது. லிவர்புலுக்கு எதிராகவும் மென்செஸ்டர் சிட்டியின் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் லிவர்புல் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

முதல் பாதி ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் அலெக்ஸ் ஒக்ஸ்லேட் சாம்பர்லைன் , லிவர்புல் கிளப்பின் முதல் கோலைப் போட்டார். எனினும் 40 ஆவது நிமிடத்தில் லெரொய் சானே போட்ட கோலின் மூலம் மென்செஸ்டர் சிட்டி ஆட்டத்தை சமப்படுத்தியது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் எட்டு நிமிடங்களில் லிவர்புல் தாக்குதல் ஆட்டக்காரர்கள் நடத்திய அதிரடி தாக்குதல்களில் மென்செஸ்டர் சிட்டி நிலைக் குலைந்தது. 59 ஆவது நிமிடத்தில் ரோபேர்டோ பிர்மினோ இரண்டாவது கோலைப் போட்ட வேளையில் 61 ஆவது நிமிடத்தில் சாடியோ மானே இரண்டாவது கோலைப் போட்டார்.

ஏழு நிமிடங்களுக்குப் பின்னர் முஹமட் சாலா, நான்காவது கோலைப் புகுத்தினார். எனினும் 84 ஆவது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வாவும், 91 ஆவது நிமிடத்தில் இல்கே குன்டோகனும் மென்செஸ்டர் சிட்டிக்கு இரண்டு கோல்களைப் போட்டனர்.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்கள் வரை போராடிய லிவர்புல் இறுதியில் 4 – 3 என்ற கோல்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லிவர்புல் பட்டியலில் 47 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.