கோலாலம்பூர், ஜன 15-
பணி ஓய்வு பெற்ற 123,000 போலீஸ் அதிகாரிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய நான்கு நற்செய்திகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு உதவுவதற்கு போலீஸ் சமூகநல நிதியாக அரசாங்கம் வெ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யும். ஹஜி யாத்திரைகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு செய்து தரப்படும். ஒரே மலேசியா அரசு ஊழியர்(PPA1M)-மலேசியா தேசிய போலீஸ் படையின் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளுக்காக 10,000 வீடுகள் ஒதுக்கப்படவுள்ளது. போலீஸ் ஓய்வூதிய விவகார பிரிவு மூலம் உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும். இந்த நான்கு திட்டங்களும் விரைவில் மேற்கொள்ளப்படும் என இன்று பிரதமர் நஜீப் அறிவித்தார்.

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் ஹஜி யாத்திரை செல்வதற்கான மொத்த ஒத்துக்கீடுகள் எவ்வளவு என துணை பிரதமர் மற்றும் தேசிய போலீஸ் படை தலைவரிடம் அறிவிப்பேன் என அவர் தெரிவித்தார்.
இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற ஓய்வு பெற்ற 5000 போலீஸ் அதிகாரிகளின் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இந்த சந்திப்புக் கூட்டத்திற்கு துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் பூசி ஹாருன் ஆகியோர் வந்திருந்தனர்.
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் ஓய்வூதிய விவகார பிரிவுகள் திறக்கப்படும் என அவர் அறிவித்தார்.

போலீஸ் அதிகாரிகளின் சேவையை போற்றுவதற்கு மட்டும் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை. நாடு, இனம், மதம் ஆகியவைகளை பாதுகாப்பதில் போலீஸ் அதிகாரிகள் ஆற்றிய பங்களிப்பு விலை மதிப்பற்றது. இதுவரை போலீஸ் பணியில் பணியாற்றிய அங்கீகாரம் பெற்ற ஒய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளை அடையாளம் காண வேண்டும் என பிரதமர் நஜீப் போலீஸ் படைத் தலைவரை கேட்டுக் கொண்டார்.