கோலாலம்பூர், ஜன 15-
எதிர்வரும் 14ஆவது பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுகாதார பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சரும் மஇகாவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கும் உடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் வேட்பாளர்கள் சுகாதார பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மக்கள் பிரதிநிதி ஒருவரின் பொறுப்பு மற்றும் கடமைகளுக்கு ஏற்ப இந்த பரிந்துரை அமைந்திருப்பதாக டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் இவ்வாறு தெரிவித்தார்.

அனைத்துத் தலைவர்களின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யவதற்கும் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது தனிநபர் விருப்பத்தை பொருத்தது.

இன்று ரெம்பியா தமிழ்ப்பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இந்த நிகழ்விற்கு கல்வித் துறை துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதனும் வந்திருந்தார்.

தங்கள் பொறுப்புகளை நல்ல முறையில் செய்யக்கூடாது என்பதற்காக சில தலைவர்கள் மீது கூறப்படும் எதிர்மறையான கருத்துகளை நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற எதிர்மறையான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. இந்திய சமூகத்தை மேம்படுத்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை சமூக வலைத்தள பதிவாளர்கள் எதிர்மறையாகவே விமர்சிக்கின்றனர் என அவர் சுட்டிக் காட்டினார்.

சமுதாயத்தில் கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத் தலைவர்கள் தங்களது கடமைகளை சிறப்பாக செய்து வருகின்றனர் என்பதை இந்திய சமூகத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். அதிகமான தமிழ்ப்பள்ளிகளில் நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆருடங்கள் எதையும் வெளியிட வேண்டாம் எனவும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.