பிரபல எழுத்தாளரும் சினிமா விமர்சகருமான ஞாநி உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இவருக்கு 63-வயது.  இவரது இயற்பெயர் வே. சங்கரன்.

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞாநி க்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

ஞாநியின்  உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஞாநி தமிழ் திரையுலகிற்கும் அரசியலுக்கும் மிகவும் பிரபலம் எனபதால் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து தங்களின் இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எழுத்தாளர் ஞாநியின் மறைவை அறிந்த தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நேரில் வந்து  இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பத்திரிகையாளர் ஞாநியின் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சுயசார்புடன் இயங்கி வந்த ஞாநியின் மறைவு தமிழ்ப் பத்திரிகையுலகிற்கு ஏற்பட்டுள்ள பெரிய பேரிழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், ஞாநி சங்கரன் மறைவு வருத்தமளிக்கிறது. எழுத்தாளர் ஞாநி எனது நண்பர்; நான் அவரது ரசிகன். தனக்கு சரியென தோன்றியதை பயமின்றி பேசக்கூடியவர், எழுதக் கூடியவர் ஞாநி என தெரிவித்துள்ளார்.

ஞாநி சங்கரன் மரணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு வரை முகநூலில் தனது விமர்சனங்களை முன்வைக்கத் தவறவில்லை. அவரது இறுதிப் பதிவுகள் இங்கே!

ஞாநி சங்கரன், ஒரு பன்முக ஆளுமை! மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். அணு உலை எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் களத்திலும் அவரது பங்களிப்பு இருந்தது.

ஞாநியின் அரசியல் விமர்சனங்கள், படு கூர்மையானவை! பாகுபாடு இல்லாமல் அவரது வார்த்தைகள் ஊழல், சுயநல அரசியல்களை குத்திக் கிழித்திருக்கின்றன. சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட ஞாநி, சில மாதங்களாகவே சிகிச்சையில் இருந்தார். இன்று (ஜனவரி 15) அதிகாலையில் அவர் மூச்சுத் திணறலால் இறந்தார்.

ஞாநி மரணமடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை, அதாவது நேற்று இரவு 9.30 மணி வரை தனது முகநூல் பக்கத்தில் விமர்சனங்களை வைத்திருக்கிறார். கடைசியாக நேற்று நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் குருமூர்த்தியின் பேச்சு குறித்து தனது கருத்துகளை கூறியிருக்கிறார். இரவு 8 மணிக்கு வெளியிட்ட முகநூல் பதிவில், ‘நாளை இரவு எமது யூடியூப் சேனல் “ஓபக்கங்கள்”பாருங்கள்:

1. வைரமுத்து ஆண்டாள் சர்ச்சை பற்றி ஞாநி
2. சமூகப் போராளி மேதா பட்கருடன் ஓர் உரையாடல்:ஞாநி’ என குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்று காலை வெளியிட்ட ஒரு பதிவில், ‘மோடி அரசு விடாப்பிடியாக இந்தியை திணித்துக் கொண்டே இருக்கிறது. பி.எஸ்.என்.எல் தொலைபேசிகள் அனைத்திலும் இப்போது ரிங் டோனாக இந்திப் பாடல் ஒலிக்கிறது. பண்பலை வரிசைகளில் பாதிக்குப் பாதி இந்தி விளம்பரங்கள். தமிழக வானொலியில் இந்தி நிகழ்ச்சிகள்’ என கூறியிருக்கிறார்.

இந்தப் பதிவுகள் இட்ட நேரத்திலும்கூட தனது முடிவை அவர் அறிந்திருக்கவில்லை. ஓரளவு நல்ல உடல் நலத்துடன் அவர் இருந்திருப்பதையே இவை காட்டுகின்றன.