அன்வாரை மிரட்டுவதா?

கோலாலம்பூர், ஜன. 16-

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் அவரின் தண்டனைக் காலம் நீட்டிக்கப்படலாம் என உள்துறை துணையமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் கூறியிருப்பது அன்வாரை மிரட்டுவதற்குச் சமமானது என பிரபல வழக்கறிஞர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நூர் ஜஸ்லான் அறிக்கை விடுவது சிறிதும் நியாயமில்லை என்று மூத்த வழக்கறிஞர் எஸ். என்.நாயர் தெரிவித்தார். அமைச்சர்கள், துணையமைச்சர்கள் அரசியல் தொடர்பாக அறிக்கை விடலாம். ஆனால், அதன் நிர்வாகம் குறித்து அறிக்கை விடக் கூடாது என்றார்.

நூர் ஜஸ்லான் அவ்வாறு அறிக்கை விட்டிருப்பது சிறைச்சாலையின் தலைமை இயக்குநரின் பதவியை அவர் பறித்துக் கொண்டதற்குச் சமமாகும். காரணம் சிறைச்சாலையின் விதிமுறைகள் தலைமை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாறாக, அமைச்சின் கீழ் அல்ல என்றும் அவர் சொன்னார்.

அவரின் அந்த அறிக்கை அன்வாருக்கு மிரட்டல் அளிப்பது போல் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சிறைச்சாலையில் இருந்துவரும் அன்வார் அதன் தலைமை இயக்குநரின் அனுமதியின்றி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் அவரின் தண்டனைக் காலத்தில் பிரச்னை ஏற்படும் என்று கடந்த வெள்ளிக்கிழமை நூர் ஜஸ்லான் கூறியிருந்தார்.