கனமான பள்ளிப் புத்தகப்பை : ஆய்வறிக்கை தயார்!

ஜோகூர் பாரு, ஜன.16

பள்ளி மாணவர்கள் அதிகமான கனம் கொண்ட புத்தகப் பைகளைத் தங்களின் தோள்களில் சுமந்து பள்ளிக்குச் செல்கிறார்கள் என்று பலர் குறைப்பட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, அதன் மீதான ஆய்வறிக்கை கிட்டத்தட்ட தயாராகி விட்டதாகக் கல்வி துணையமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட்டிடம் அந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர், அந்தக் கனமான புத்தகப் பைகளை மாணவர்கள் சுமக்கின்றனர் என்ற பிரச்சனைக்கான தீர்வும் அதில் உள்ளடக்கியிருப்பதாக கமலநாதன் தெரிவித்தார்.

இதனிடையில், பள்ளி புத்தகப் பைகளின் கனம் படிப்படியாகக் குறைந்து வருவதாக அவர் தகவல் தெரிவித்தார். குறிப்பாக முதலாம் ஆண்டு மாணவர்களின் புத்தகப் பைகளின் கனம் குறைந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பள்ளித் தவணை தொடங்கப்பட்டதிலிருந்து, தாம் சில பள்ளிகளுக்குச் சென்று பார்வையிட்டதாகவும், மாணவர்களிடத்தில் பேசுகையில், அவர்களின் பள்ளிப் புத்தகப் பைகளைத் தாம் தூக்கிப் பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.