40-வது பிறந்தநாளில் விஜய் சேதுபதியின் 25-வது படம் ‘சீதக்காதி’

0
6

தமது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே  பல்வேறு விதமான கேரக்டரில் நடித்து  மக்கள் செல்வன் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் 25-வது படமான ‘சீதக்காதி’யின்  அறிவிப்பு,  இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நாயகனாக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. அந்தப் படத்தின் வரவேற்பிற்குப் பிறகு அவர் நாயகனாக நடித்து வெளிவந்த ‘பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றி அவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக மாற்றியது.

கடந்த வருடம் வெளிவந்த படங்களில் விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது ஆறேழு படங்களுக்கும் மேல் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் 25வது படமான ‘சீதக்காதி’ படத்தின் அறிவிப்பு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் மற்றும் விரைவில் வரவுள்ள ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்களை இயக்கியுள்ள பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்குகிறார். கோவிந்த் மேனன் படத்திற்கு இசையமைக்கிறார்.

விரைவில் ‘சீதக்காதி’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி 70-வயது கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.