பெட்டாலிங் ஜெயா, ஜன.17
தான் படித்த கல்வி அடிப்படையிலான வேலைக் கிடைக்காமல் இருக்கும் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மக்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதில் அரசாங்கம் தோல்வி கண்டிருப்பதைக் காட்டுவதாக முன்னாள் பிரதமரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

இப்போது பல பட்டதாரி மாணவர்கள் வேறு வழிகளின்றி உபர் போன்ற வாகனங்கள் பகிர்வு நிறுவனங்களில் ஓட்டுநர்களாகவும் நாசி லெமாக் விற்றும் வருவதாக அவர் கூறினார்.

இத்தகைய சூழ்நிலை அவமானத்திற்குரியது என்றும் ஊடகங்கள் இதனை ஒரு வெற்றியாக காண்பிக்கக்கூடாது என்றும் நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளருமான துன் மகாதீர் குறிப்பிட்டார். பட்டதாரிகள் நாசி லெமாவை விற்பதிலும் உபர் ஓட்டுநர்களாக இருப்பதிலும் நாம் பெருமை அடைய முடியாது. அவர்களுக்கு வேறு எந்த வருமானங்களும் இல்லாததால் அவர்கள் இத்தகைய வேலைகளை செய்து வருகின்றனர்.

மாறாக, தாங்கள் பெற்ற கல்வி, ஆற்றல், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் பயிற்சி பெற்றிருக்கும் இவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென இன்று முகநூலில் இரண்டாவது முறையாக நடைபெற்ற ‘‘போலிசி டால்க் எனப்படும் கொள்கை உரையில் அவர் கூறினார். பயிற்சியை முடித்த தனிநபர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் இல்லாத தொழில் சந்தை இருப்பதற்கான அடையாளமாக இது விளங்குகின்றது. நாசி லெமாக் விற்பதாக இருந்தால் நாசி லெமாக்கை எப்படி என்பதை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கக்கூடிய பல்கலைக்கழகம் இருக்க வேண்டும். ஆனால், இது போன்ற பல்கலைக்கழகங்கள் இல்லை.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைத்தால் இளைஞர்களை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் துன் மகாதீர் சொன்னார். கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் 2017ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது பட்டதாரி மாணவர்கள் மேற்கொண்டுவரும் நாசி லெமாக் வியாபாரம் பற்றி பேசினார். இதுப்போன்ற வியாபாரங்களில் ஈடுபட்டுவரும் பட்டதாரி மாணவர்களை அரசாங்கம் ஊக்குவிப்பதாகவும் அவர்கள் வெற்றியடைய வேண்டுமென்றும் நஜீப் கூறியிருந்தார்.

2017ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பி40 தரப்பினர்கள் உபர், கிரேப் போன்ற வாகன ஓட்டுநர்களாக வேலை செய்வதற்கு அரசாங்கம் ஊக்குவிக்கும் வகையில் பிரிம் தொகை வாயிலாக புதிய வாகனத்தை அவர்கள் கொண்டிருக்கவும் புரோட்டோன் ஐரிஸ் காரை வாங்குவதற்கு 4 ஆயிரம் வெள்ளி சலுகையையும் அறிவித்தது. இந்நிலையில், பிரதமர் நஜீப் மற்றும் அரசாங்கத்தின் கண்ணோட்டத்திற்கு முரணான வகையில் துன் மகாதீர் இத்தகைய கருத்துகளை தனது உரையில் முன்வைத்துள்ளார்.