மாபூஸ் ஒமாரின் பேச்சால் தெங்கு அப்துல்லா அதிருப்தி!

0
4

குவந்தான், ஜன.17 – 

பகாங் சுல்தான், சுல்தான் அஹ்மாட் ஷாவை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ள  பொக்கோக் செனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபூஸ் ஓமாரின் நடவடிக்கையில் தாம் அதிருப்தி அடைந்திருப்பதாக பகாங்கின் இடைக்கால சுல்தான் தெங்கு அப்துல்லா சுல்தான் அஹ்மாட் ஷா தெரிவித்துள்ளார்.

மூத்தவர்களை  இளையவர்கள் மதிக்க வேண்டும் என்பது மலாய்க்காரர்களின் பண்பாடு. ஆனால் மாபூஸ் ஓமார் அந்த பண்பாட்டையும் மீறி தமது தந்தையை இழிவுப்படுத்தும் வகையில் அரசியல் பிரசாரத்தில் அவரை ஒரு நகைச்சுவை பொருளாக பயன்படுத்தி இருப்பது எல்லை மீறிய செயல் என தெங்கு அப்துல்லா தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் மாபூஸ் ஓமார் மீது போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதால் அவர் மீதான நடவடிக்கையை தாம் அமலாக்க தரப்புகளிடமே விட்டு விடுவதாக தெங்கு அப்துல்லா தெரிவித்துள்ளார்.

92 வயதில் துன் டாக்டர் மகாதீர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை தற்காத்து பேசிய மாபூஸ் ஓமார் ஏன் நோயுற்றுள்ள பகாங் சுல்தான் இன்னமும் ஆட்சியில் இருக்கிறார் என நகைச்சுவையுடன் கேள்வி எழுப்பி இருந்தார்.

மாபூஸ் ஓமாரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.