கோலாலம்பூர், ஜன, 17-
மாணவி ஷோபனா மலேசிய குடியுரிமை இல்லாததால் பள்ளியில் இணைய அனுமதிக்கப்படாத பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. அம்மாணவியின் குடும்பத்தினர் உதவும் கரங்கள் முரளி மூலம் டிரா மலேசியாவைத் தொடர்பு கொண்டார்கள்.
அம்மாணவிக்கு உதவும் பொருட்டு உடனடியாக டிரா மலேசியா கல்வி இலாகாவையும் கல்வி அமைச்சின் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ கமலநாதனையும் தொடர்பு கொண்டதாக டிரா மலேசியாவின் அதிகாரி மணிவண்ணன் தெரிவித்தார்.
அவர்களுடைய ஆதரவுடன் இன்று செல்வி ஷோபனா கல்வி பயில அனுமதி பெற்று ஹைக்கோம் தமிழ்ப்பள்ளியில் இணைந்தார் எனும் நற்செய்தியையும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார். குடியுரிமை இல்லாத ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பள்ளி கட்டணமாக ரி.ம. 120 செலுத்த வேண்டும்.
செல்வி ஷோபனாவிற்கான அச்செலவை டிரா மலேசியாவே ஏற்றுக்கொண்டது. மேலும், அச்சிறுமியை அவருடைய தாத்தா பாட்டியே தத்தெடுத்து அவருக்கு குடியுரிமை பெறும் முயற்சிகளிலும் டிரா இறங்கியுள்ளது. அதற்கான செலவுகளையும் டிரா மலேசியாவே ஏற்றுக் கொள்ளும் என்று அவ்வியக்கத்தின் தேசிய தலைவர் சரவணன் சின்னப்பன் கூறினார்.
இது போன்ற மாணவர்கள் பள்ளியில் இணைய பெரும் ஆதரவளிக்கும் டத்தோ கமலநாதனுக்கு அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார். ஆனாலும், கொள்கை மாற்றம் ஒன்றே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இறுதியாக ஒவ்வொரு மாணவனும் பள்ளி செல்வதை உறுதிப்படுத்துவது டிரா மலேசியாவின் கடமையாகின்றது.
எனவே, அடுத்த வாரம் தொடங்கி இப்பிரச்னையில் சிக்கியுள்ள மாணவர்களுக்கு தீர்வு வழங்க டிரா அதிகாரிகள் நாடு தழுவிய பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்றும், இம்மாதிரியான பிரச்னைகளில் சிக்கி உள்ள மாணவர்கள் 03 என்ற எண்களில் டிரா மலேசியவைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

