பெட்டாலிங் ஜெயா, ஜன.18-
வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் செலாயாங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு மீண்டும் வில்லியம் லியோங் ஜீ கீனுக்கு பி.கே.ஆரின் தலைமைத்துவம் வாய்ப்பளிக்க வேண்டுமென கூறி அக்கட்சியின் உறுப்பினர்கள் அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஸிசா வான் இஸ்மாயிலிடம் மகஜரை வழங்கினர்.

பாஸ் கட்சியுடன் பி.கே.ஆர். பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால் அதிருப்தியடைந்த வில்லியம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பி.கே.ஆரின் அரசியல் பிரிவிலிருந்து பதவி விலகினார். இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு இந்த நாடாளுமன்ற தொகுதியை அவர் வென்றதிலிருந்து சிறப்பான அடைவுநிலையைப் பதிவு செய்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

வரும் பொதுத்தேர்தலில் செலாயாங் நாடாளுமன்ற தொகுதியில் பி.கே.ஆரின் வேட்பாளராக மீண்டும் வில்லியமை நிறுத்துவதற்கு செலாயாங் பி.கே.ஆர். கிளையும் அத்தொகுதியிலுள்ள 38 அரசு சார்பற்ற இயக்கங்களும் முழு ஆதரவு வழங்குவதாக பி.கே.ஆர். தலைமையகத்தில் மகஜரை ஒப்படைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் கூறினர்.

சமயம், இனம், அரசியல் கொள்கைகளைப் பார்க்காமல் வில்லியம் லியோங் மிக எளிதில் மக்களை சந்திக்கக்கூடியவர் என்பதோடு சிறந்த சேவையை வழங்கக்கூடியவர். அவரை செலாயாங் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக பி.கே.ஆர். நிறுத்த வேண்டுமென பி.கே.ஆர். செலாயாங் கிளையின் பிரதிநிதி சஹாருடின் அபு பாக்கார் தெரிவித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வில்லியம் லியோங், 17,958 பெரும்பான்மை வாக்குகளில் மசீசவின் டத்தோ டொனால்ட் லிம் சியாங், பெர்ஜாசா வேட்பாளர் ஹாசிசி ரஹ்மானைத் தோற்கடித்தார். ஆயினும், அந்த தொகுதிக்கு வேறு வேட்பாளர் நிறுத்தப்படவிருப்பதால் இந்த மகஜர் வழங்கப்பட்டதாக கூறப்படுவதை சஹாருடின் மறுத்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வில்லியம் லியோங் பி.கே.ஆரின் அரசியல் பிரிவில் பதவி விலகிய போது அடுத்த பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார்.

ஆயினும், முடிவு பி.கே.ஆரின். தலைமைத்துவத்தை பொறுத்தது. அங்கு யாரைக் கட்சி நிறுத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். ஆனால், இப்போதைய சூழலில் வில்லியம் லியோங் இத்தொகுதியில் நிலைத்திருக்க வேண்டுமென நாங்கள் கருதுகின்றோம் என சஹாருடின் அபு பாக்கார் குறிப்பிட்டார்.