கோத்தா பாரு, ஜன. 18-
தற்போது, நாட்டில் வாழ்க்கை செலவினம் அதிகரித்துள்ளதால் பொதுச்சேவை ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் உயர்த்த வேண்டும் என கியூபெக்ஸ் எனப்படும் பொதுச் சேவை ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்தது.

வீடுகளின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுச்சேவை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் கோரிக்கை நியாயமானது என கியூபெக்ஸின் தலைவர் டத்தோ அஸி மூடா தெரிவித்தார். சொந்த வீட்டை கொண்டிருக்க வேண்டும் என்பது சுலபமானது அல்ல. வாழ்க்கையை தொடங்கவிருக்கும் அனைவரும் ஒரு சொந்த வீட்டை கொண்டிருப்பது அத்தியாவசியமாகும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

வீடுகளின் விலைகள் அதிகமாக இருப்பதன் காரணத்தால் பெரும்பாலான பொதுச்சேவை ஊழியர்களால் வீடுகளை வாங்க முடிவதில்லை. அவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு விவகாரம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என டத்தோ அஸி மூடா நம்பிக்கை தெரிவித்தார்.

வாங்கும் மதிப்பிற்கு உட்பட்ட வீடமைப்பு திட்டங்கள், ஒரே மலேசியா வீடமைப்பு திட்டங்கள் என அரசு பல வீடமைப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. வாழ்க்கையில் செலவினம் அதிகரித்தும் வரும் நிலையில் குறைந்த வருமானம் பெறும் பொதுச்சேவை ஊழியர்கள் எவ்வாறு வீடுகளை வாங்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

நாடு முழுவதிலும் உள்ள பொதுச்சேவை ஊழியர்களின் நலனுக்காக இந்தக் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும். சுமார் 750,000 பொதுச்சேவை ஊழியர்களின் எதிர்காலத்தை கருதில் கொண்டு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாது என நாங்கள் நம்புகிறோம் என டத்தோ அஸி மூடா தெரிவித்தார்.