மன்செஸ்டர் சிட்டியில் இணைந்தார் பென்சமின் மெண்டி!

லண்டன், ஜூலை 24-

இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணியான மன்செஸ்டர் சிட்டி, அடுத்த பருவத்திற்கான பிரிமியர் லீக், ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை வெல்லத் தயாராகி விட்டது. குறிப்பாக கால்பந்து உலகின் முன்னணி ஆட்டக்காரர்களை அவ்வணி குறிவைத்து ஒப்பந்தம் செய்து வருகின்றது.

அந்த வகையில் இன்று (24 மொகானோ அணியின் தற்காப்பு ஆட்டக்காரரான பென்சமின் மெண்டியை (வயது 23) மன்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்துள்ளது. மொனாகோ அணியிலிருந்து அவரைப் பெறுவதற்கு மன்செஸ்டர் சிட்டி 52 மில்லியன் பவுன் தொகையை செலவிட்டுள்ளது.

5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் அவர் மன்செஸ்டர் சிட்டியில் இணைந்துள்ளார். அவருக்கு 22ஆம் எண் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது. ‘‘கனவு நனவானது என மெண்டி தமது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். பெப் குவாடியாலோ தலைமையில் மன்செஸ்டர் சிட்டி சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்யுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த பருவத்தின் இறுதியில் மன்செஸ்டர் சிட்டி அணியிலிருந்து முன்னணி தற்காப்பு ஆட்டக்காரர்கள் வெளியேறினார்கள். சிலரை வெளியேறும் படி நிர்வாகமே வெளிப்படையாக அறிவித்தது. இந்நிலையில் இதுவரையில் 3 தற்காப்பு ஆட்டக்காரர்களை மன்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்துள்ளது. அதில் டோட்டன்ஹம் அணியிலிருந்து கைல் வாக்காரை 54 மில்லியன் பவுன் தொகைக்கு ஒப்பந்தம் செய்த அவ்வணி டேனிலோவை ரியல் மாட்ரிட் அணியிலிருந்து பெறுவதற்கு அவ்வணி 27 மில்லியனை செலவிட்டது. ஒட்டுமொத்தமாக தற்காப்பு ஆட்டக்காரர்களைப் பெறுவதற்கு மன்செஸ்டர் சிட்டி 133 மில்லியன் பவுன் தொகையை செலவிட்டுள்ளது.