3,500 தமிழ்ப்பாடல்களுடன் அறிமுகம் காண்கிறது TSR கராவ்க்கே மையம்!

ஷா ஆலம், ஜன.19-

திரைப்பட வெளியீட்டுத் துறையில் தனி முத்திரை பதித்த TSR சினிப்பிளேக்ஸ் அமைந்துள்ள ஷா ஆலம் ஐ.ஆர்.டி.கே.எல். மாலில் 29 அறைகளைக் கொண்ட கராவ்க்கே மையம்  அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்டது.

கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த மோலில் குடும்பத்திற்கு தேவையான அனைத்து கேளிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக உலகத்தில் தலைசிறந்த ஒலி, ஒளி நவீன வசதிகளை உள்ளடக்கிய புத்தம் புதிய திரையரங்குகள் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அது மட்டுமின்றி சிறுவர்களுக்கு தேவையான கேளிக்கை விளையாட்டு இயந்திரங்களும் இங்கு உள்ளது. அதோடு 9டி தொழில் நுட்ப காட்சிகளும் இங்கு இருப்பதால் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களின் முதன்மை கேளிக்கை தளமாக ஐ.ஆர்.டி.கே. மால் விளங்குகின்றது.

குறிப்பாக கடந்தாண்டு கராவ்க்கே மையமும் இங்கு திறக்கப்பட்டது. ஆனால் தமிழ்ப்பாடல்கள் மிக குறைவான அளவிலேயே இருந்தன. இந்நிலையில் கராவ்க்கே மையத்தில் அதிக அனுபவம் கொண்ட ஜோம்ஸ் கராவ்க்கே உரிமையாளர் விஜய் எமெர்ஜன்ஸி துணையுடன் இப்போது இங்கு 3,500 தமிழ்ப்பாடல்கள் இடம் பெறவுள்ளன.

தற்போது 500 தமிழ்ப்பாடல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் வாரம் வாரம் புத்தம்புதிய பாடல்களும் பதிவேற்றம் செய்யப்படும். 3,500 தமிழ்ப்பாடல்கள் இந்த கராவ்க்கே மையத்தில் பதிவேற்றம் செய்த பிறகும் புத்தம் புதிய பாடல்கள் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும் என்று ஐ.ஆர்.டி.கே. மாலின் உரிமையாளர் டான்ஸ்ரீ ராமசாமி தெரிவித்தார்.

பொதுமக்களின் மன நிறைவை பூர்த்தி செய்யும் எண்ணத்தை தமது நிர்வாகம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த அடிப்படையில் ஒரே இடத்தில் அனைத்தையும் அனுபவிக்க முடியும் என்ற சூழலை ஐ.ஆர்.டி.கே.எல். மாலில் உருவாக்கியிருப்பதாக அவர் செய்தியாளரிடம் கூறினார். இந்த கராவ்க்கே மையத்தில் 29 அறைகள் உள்ளன. குறிப்பாக 20 பேர் அமரக்கூடிய பெரிய அறை முதல் இரண்டு பேர் அமரக்கூடிய சிறிய அறையும் உண்டு.

இங்கு வர விருப்பம் உள்ளவர்கள் இணையத்தின் மூலமாக பதிந்துகொண்டு பணத்தையும் செலுத்தலாம். இந்த வசதியை முதல் முறையாக ஐ.ஆர்.டி.கே.எல். மால் தான் முதன் முறையாக ஏற்படுத்தி தந்துள்ளது என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்த கராவ்க்கே அறையில் இருந்து சத்தம் வெளியே செல்லாது. அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் இவை அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நல்ல இசையை கேட்கக்கூடிய சூழ்நிலையை இங்கு உருவாக்கி உள்ளோம். ஆனால் விலையை பொறுத்தவரை நியாயமான முறையையே கடைப்பிடிக்கிறோம் என்று டான்ஸ்ரீ ராமசாமி கூறினார்.

ஐ.ஆர்.டி.கே.எல். மாலில் உள்ள கராவ்க்கே மையம் நிச்சயம் இசைபிரியர்களைக் கவரும் என்று விஜய் எமர்ஜென்ஸி கூறினார். இந்த மையத்திற்கு அதிகமான இந்தியர்கள் வருகை புரிவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இளையராஜா தொடங்கி அனிருத் வரை அனைத்து இசையமைப்பாளர்களின் பாடல்களும் இங்கு உள்ளன. 60ஆம் ஆண்டுப் பாடல் பிரியர்களுக்குமான பாடல்களையும் பதிவேற்றம் செய்ய விருப்பதாக அவர் தெரிவித்தார்.

காலை 11.00 மணி தொடக்கம் இரவு 12.00 மணி வரை இந்த கராவ்க்கே மையம் திறந்திருக்கும். ஐ.ஆர்.டி.கே.எல். மாலில் உள்ள பெரிய மாநாட்டு மண்டபம் எப்படி அனைத்து இனங்களையும் கவர்ந்துள்ளதோ அதே போல் இந்த கராவ்க்கே மையமும் அனைத்து இனங்களின் மத்தியிலும் முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.