வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > புதிய மாற்றம் புதிய எழுச்சி களம் காண்கின்றது மிஃபா!!!
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

புதிய மாற்றம் புதிய எழுச்சி களம் காண்கின்றது மிஃபா!!!

கோலாலம்பூர், ஜன, 21-

நமது சமுதாயத்தை பிரதிநிதித்து கடந்த ஆண்டு பிரிமியர் லீக்கில் களம் கண்ட நமது மிஃபா அணி அதில் நிலைத்திருக்கும் வாய்ப்பினை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடம் புதிய மாற்றங்களோடும், புதிய எழுச்சியோடும் நமது அணி களம் இறங்கவுள்ளது அது குறித்த கண்ணோட்டத்தை சமுதாய மக்களுக்காக தமிழ்நேசன் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.

மிஃபா அணி குறித்தும் அதன் வெற்றிகள் குறித்தும் நாம் அனைவருக்கும் நன்கு தெரியும் இருப்பினும் அந்த அணியின் இன்றைய நிலவரம் என்ன என்பதை அறியும் வண்ணம் மிஃபாவின் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் அவர்களை அணுகிய போது அவர் கூறியதாவது கடந்த ஆண்டு அனுபவமின்மையின் காரணமாக பல சோதனைகளை கடக்க நேர்ந்தது.

அதே நேரத்தில் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகள் நமக்கு சறுக்கல்களை ஏற்படுத்தி இருந்தன. இருப்பினும் பல போராட்டங்களின் மத்தியில் நாம் பிரிமியர் லீக்கில் நிலைத்திருக்கும் வாய்ப்பினை பெற்றோம். கடந்த ஆண்டு நிகழ்ந்த தவறுகளை சரி செய்து இந்த வருடம் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அணியில் சில மாற்றங்கள் செய்யப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தலைமைப்பயிற்றுநராக கே.தேவன் அவர்களும், மிஃபாவின் செயலாளராக கே.வி.அன்பா அவர்களும், அணியின் மேலாளராக துவான் ஏ.எஸ்.பி ராஜன் அவர்களும் நியமிக்கப் பட்டுள்ளார்கள். துணைப் பயிற்றுநர்களாக லியோங் ஓங் செங், நந்தா ஆகியோரும், கோல்கீப்பர் பயிற்றுநராக முருகன், பைசல் ஆகியோரும் உள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் தான் கே.தேவன் அவர்கள் தலைமைப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.

இவரைப்பொறுத்த வரையில் இவரது 2005-2006 ஆம் ஆண்டு மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை நெகிரி செம்பிலான் எப்.ஏ அணி வென்றது. இந்த அணி மலேசியக்கிண்ண இறுதியாட்டம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

இவரது தலைமையில் தான் 2008-ல் கோலா மூடா எப்.சி அணி மலேசிய பிரிமியர் லீக்கில் சாம்பியன் பட்டத்தையும், 2009 இல் சிலாங்கூர் எப்.ஏ அணி சூப்பர் லீக்கில் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இவரது அனுபவம் நமது அணிக்கு நல்லதொரு மாற்றத்தையும், ஏற்றத்தையும் அளிக்குமென டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

நமது அணிக்கு புது வரவாக சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சுப்ரமணியம் சூர்யபராட், ராஜேஷ் பெருமாள் ஆகியோர் உள்ளனர். சுப்ரமணியத்தை பொறுத்த வரையில் பேராக், சிலாங்கூர், கிளந்தான் அணிகளுக்காகவும், தேசிய அணிக்காகவும் விளையாடியவர். ராஜேஷ் பெருமாள் பி.கே.என்.எஸ், சிலாங்கூர் , கெடா அணிகளுக்காக விளையாடியவர்.

கடந்த ஆண்டு நமது அணிக்காக விளையாடிய இறக்குமதி ஆட்டக்காரரான ஷெர்மன் மிஃபா அணியில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளார். நமது பிரிமியர் லீக் அணி நட்புமுறை ஆட்டங்களில் பங்கெடுத்து வருகின்ற சூழலில் சிலாங்கூர் எப்.சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5-1 என்ற கணக்கிலும், 19 வயதிற்குட்பட்ட மலேசிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதோடு மட்டுமில்லாது நமது சமுதாய இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அதிகப்படுத்தும் நோக்கில் நமது அணி பிரசிடெண்ட் கிண்ணப் போட்டிகளிலும் பங்கெடுக்கவுள்ளது. இந்த அணிக்கு தலைமைப் பயிற்றுநராக சோமசுந்தரம் அவர்களும், மேலாளராக முருகேஷன் அவர்களும் நியமிக்கப் பட்டுள்ளார்கள். இவர்களது தலைமையில் அணி தயார்படுத்தப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன