ஜோகூர்பாரு, ஜன.21-

அண்மையில் உடைபட்ட ஸ்ரீ சிவசக்தி ஸ்ரீ சின்னகருப்பர் ஆலயத்தின் நிர்வாக பிரதிநிதிகளை இன்று இஸ்தானா புக்கிட் பிளாங்கி ஜோகூர்பாருவில் சுல்தான் இப்ராஹிம் நேரில் சந்தித்தார்.  இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. உடைக்கப்பட்ட ஆலயத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கு மாநில அரசாங்கம் மூலம் புதிய நிலம் கிடைப்பதை நானே தனிப்பட்ட முறையில் முன்னின்று உறுதிப்படுத்துவேன் என்று சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் துங்கு தெமங்கோங் ஜோகூர், துங்கு இட்ரிஸ் அல் ஹாஜ் இப்னி சுல்தான் இப்ராஹிமும் கலந்து கொண்டார். ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் ஆர். வித்யானந்தன், பாசீர்கூடாங் தொகுதி மஇகா தலைவரும் மந்திரிபுசாரின் சிறப்பு அதிகாரியுமான ஆதவன் சபாபதி, ஜோகூர் மந்திரிபுசாரின் இன்னொரு சிறப்பு அதிகாரி எஸ். தேவா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் ஆலயத்தை புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கு மேன்மைதங்கிய ஜோகூர் சுல்தான் 1 லட்சம் வெள்ளி ரொக்க பணத்தையும் துங்கு இட்ரிஸ் 70 ஆயிரம் வெள்ளி ரொக்க பணத்தையும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி அந்த ஆலயம் இடிக்கப்பட்டது. ஆலயம் முன்பு அமைந்திருந்த நிலத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 0.4 ஹெக்டர் நிலத்தை ஆலயத்திற்கு ஒதுக்க மாநில அரசு இணக்கம் தெரிவித்துள்ளது என்று வித்யானந்தன் தெரிவித்துள்ளார்.