ஷா ஆலம், ஜன.22
ஊழல்கள் நிறைந்த அம்னோ தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் இல்லாமல் வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் அரசாங்கம் மாறினால் நாடு சிறப்பாக இருக்கும் என பாலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் இங் தியேன் சீ தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டை நம்பிக்கைக் கூட்டணிக் கைப்பற்றினால் சீரழியும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறிய கருத்துக்கு எதிர்மாறாக தாம் இதனைக் கூறுவதாக அவர் கூறினார். நஜீப்பின் குற்றச்சாட்டு நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களிக்கக்கூடாது என வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக இங் தியேன் சீ சொன்னார்.

இவ்விவகாரம் உண்மையில்லை என்பதோடு மக்கள் வெளியுலகம் தெரியாமல் இருப்பது போன்று அவர்களை இழிவுப்படுத்தும் நடவடிக்கையாக உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரிலும் பினாங்கிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததிலிருந்து பல்வேறு மேம்பாட்டுகளை அம்மாநிலங்கள் அடைந்துள்ளது. மாறாக, அழிவைச் சந்திக்கவில்லை.

அம்னோ தேசிய முன்னணி தலைமையிலான மாநிலங்களைவிட இவ்விரு மாநிலங்களில் மக்கள் நிறைய நன்மைகளை அடைந்துள்ளனர். ஆகையால், பிரதமர் நஜீப்பின் அறிக்கையில் உண்மையில்லை. ஊழல்கள் நிறைந்த ஆட்சி தொடர்ந்தால்தான் நாடு சீரழியும். மேலும், அவரது அறிவிப்பின் வாயிலாக வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் அம்னோ தேசிய முன்னணி வெற்றியடையும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லாததை இது காட்டுவதாக இங் தியேன் சீ கூறினார்.