பத்துகேவ்ஸ், ஜன, 23-

பத்துமலைத் திருதலத்தை புறக்கணிப்போம் என்ற பிரசாரத்தை தொடங்கி மக்களை குழப்பிய அருண் துரைசாமி மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இதில், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் உறுதியாக இருப்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.

தைப்பூசத்தன்று சந்திர கிரணம் ஏற்படுகின்றது. இதனால், ஆகம முறைப்படி ஆலயத்தை மூட வேண்டுமென சில தரப்பினர் கூறி வந்த நிலையில், பத்துமலைத் திருத்தலத்தில் ஆலய நடைகள் தைப்பூசத்தன்று மூடப்படாது என டான்ஸ்ரீ நடராஜா அண்மையில் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தை முதன்மை படுத்தி, பத்துகேவ்ஸ் ஆலயத்தை புறக்கணிக்க வேண்டும். வேறு முருகன் ஆலயங்களில் நேர்த்திக் கடன் செலுத்துங்கள் என அருண் துரைசாமி என்பவர் தமது முகநூல் பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றம் செய்திருந்தார். இது வாட்சாப்பிலும் பரவலாகப் பகிரப்பட்டது.

அதன் பின்னர் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் அருண் துரைசாமி மீது சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து, தேவஸ்தானம் ஆலோசித்தது. அதன் முடிவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டதாக டான்ஸ்ரீ நடராஜா திட்டவட்டமாகக் கூறினார்.

தேவஸ்தானம் கட்டுப்படுவது, நீதிமன்ற உத்தரவிற்கு மட்டும்தான். தேவஸ்தான நடவடிக்கைகள் மீது அதிருப்தி கொண்டவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டுமே தவிர, தவறான செய்திகளைப் பரப்பக்கூடாது. முன்னதாக பத்துமலை தைப்பூசத்தை நிறுத்த வேண்டுமென்று ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் டான்ஸ்ரீ நடராஜா நினைவுக் கூர்ந்தார்.

தேவஸ்தானம் மீது அவதூறு பரப்புவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்பதற்காக அருண் துரைசாமி மீது நிச்சயம் சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அவர் உறுதியளித்தார்.