அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒற்றுமை முக்கியம் – டத்தோ ஸ்ரீ நஸ்ரி!
முதன்மைச் செய்திகள்

இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒற்றுமை முக்கியம் – டத்தோ ஸ்ரீ நஸ்ரி!

கிள்ளான், ஜன.24 –

மலேசியாவில் சிறுபான்மை இனமாக உள்ள இந்தியர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் என சுற்றுலா , பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் மலாய், சீன சமூகங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் இந்தியர்களுக்கு அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இத்தகைய திட்டங்கள் வெற்றி பெறுவது இந்திய சமூகத்தின் ஒற்றுமையில் உள்ளது என டத்தோஸ்ரீ நஸ்ரி கூறினார். யாக்கிம் எனப்படும் முன்னாள் இந்திய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது நஸ்ரி இவ்வாறு தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள இந்தியர்கள் இன்றும் கலை , கலாச்சாரங்களை மறக்காமல் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருவதைக் கண்டு தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார். குறிப்பாக பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்கள் பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்றதை கண்டு தாம் வியந்து போனதாக அவர் கூறினார்.

கலை , கலாச்சாரங்களை என்றுமே போற்றி பாதுகாத்து வரும் ஒரு சமூகம் தனது அடையாளத்தை என்றும் இழக்காது என நஸ்ரி மேலும் தெரிவித்தார். இதனிடையே வரவேற்புரை ஆற்றிய யாக்கிம் அமைப்பின் தலைவர் டத்தோ முனியாண்டி, மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் தேசிய முன்னணி அரசாங்கத்தைப் பாராட்டினார்.

எனினும் சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பி.கே.ஆர் தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் எத்தகைய மாற்றத்தையும் சிலாங்கூரில் உணர முடியவில்லை என அவர் சொன்னார். குறிப்பாக இந்தியர்களுக்கு எத்தகையை நன்மையும் ஏற்படவில்லை என டத்தோ முனியாண்டி தெரிவித்தார்.

இதனைக் கருத்தில் கொண்டு 14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் உள்ள இந்தியர்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். இந்திய சமூகத்துக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வரும் அரசியல் கட்சியை ஆதரிக்க அவர்கள் முன்வர வேண்டும் என அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன