கோப்பா டெல் ரே – லெகனேசிடம் மண்ணைக் கவ்வியது ரியல் மெட்ரிட் !

0
4

மெட்ரிட், ஜன.25 –

ஸ்பெயின் கோப்பா டெல் ரே கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதியில் பலம் வாய்ந்த அணியான ரியல் மெட்ரிட் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் நடந்த ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 1- 2 என்ற கோல்களில் லெகனேசிடம் வீழ்ந்தது.

கடந்த வாரம் நடந்த முதல் ஆட்டத்தில் 1 -0 என்ற கோலில் ரியல் மெட்ரிட் வெற்றி பெற்றிருந்தாலும்,. எதிரணியின் இடத்தில் போடப்பட்ட இரண்டு கோல்களின் மூலம் லெகனெஸ் அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் பயிற்றுனர் சினிடின் சிடான், முன்னணி ஆட்டக்காரர்களான கேரத் பேல், கிறிஸ்டியானோ ரொனால்டோவை களமிறக்கவில்லை.எனினும் செர்ஜியோ ராமோஸ், கரீன் பென்சீமா, மார்க் அசென்சியோ போன்ற ஆட்டக்காரர்களுக்கு சிடான் வாய்ப்பு அளித்திருந்தார்.

32 ஆவது நிமிடத்தில் ஜாவி எராசோ போட்ட கோலின் மூலம் லெகனேஸ் 1 – 0 என முன்னணி வகித்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் கரீம் பென்சிமா ஆட்டத்தை சமப்படுத்தினாலும், கப்ரியல் பிரேஸ் போட்ட கோல் லெகனேஸ் அணியின் வெற்றியை உறுதிச் செய்தது.

ஸ்பெயின் லா லீகா போட்டியில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவைக் காட்டிலும் 19 புள்ளிகளில் பின் தங்கியுள்ள ரியல் மெட்ரிட் தற்போது மேலும் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு தாமே பொறுப்பேற்று கொள்வதாக சிடான் தெரிவித்துள்ளார்.