புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > சகிப்புத்தன்மையே நமது பலம்
இந்தியா/ ஈழம்

சகிப்புத்தன்மையே நமது பலம்

புதுடெல்லி, ஜூலை 25-

நாட்டின் 14–வது ஜனாதிபதியாக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட ராம்நாத் கோவிந்த் இன்று(செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கிறார். இதையொட்டி ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறும் பிரணாப் முகர்ஜி நேற்று டெலிவி‌ஷனில் தோன்றி நாட்டு மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டதை உள்ளடக்கியதாக சமுதாயம் அமையவேண்டும். நாட்டில் உள்ள ஏழையிலும் ஏழை அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். நமது கொள்கைகளின் பயன்கள் கடைக்கோடி நபர் வரை சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக அமைவதும் அவசியம்.

இந்தியாவின் கல்வியை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உயர் கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்படவேண்டும். நமது பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடம் நினைவாற்றலை ஊக்கப்படுத்துவதை கைவிட்டு அறிவாற்றலை வளர்ப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் இந்தியக் கல்வியை பொற்காலத்துக்கு கொண்டு செல்ல இயலும்.

இயற்கை வளம் நமக்கு தாராளமாய் அமைந்துள்ளது. ஆனால் அதன் மீது பேராசை கொண்டால் இயற்கை தன் கோபத்தை வெளிப்படுத்துகிறது.

இன்றும் இந்தியாவின் சில பகுதிகளில் பேரழிவை உண்டாக்கும் வெள்ளம் ஓடுவதையும், வேறு சில பகுதிகளில் கடும் வறட்சியும் காண்கிறோம். பருவநிலை மாற்றம் விவசாயத்தின் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் நமது விவசாயிகள், தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றி நமது மண்ணின் வளத்தை மீட்க வேண்டும். தண்ணீர் வளம் குறைந்து வருவதை தடுக்க வேண்டும். அதேபோல் சுற்றுச்சூழலையும் சீரமைக்க வேண்டும்.

சகிப்புத்தன்மை உணர்வை பராமரிப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் நமது நாட்டின் ஆன்மா பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையில்தான் அடங்கி இருக்கிறது. இது இந்தியாவின் பூகோள அடையாளம் மட்டும் அல்ல. பல நூற்றாண்டு கால சிந்தனைகள், தத்துவங்கள், அறிவுத்திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம், கலைகள், புதுமை மற்றும் அனுபவத்தை கொண்டது. பல்வேறு கலாசாரம், நம்பிக்கைகள், மொழி ஆகியவை இந்தியாவின் தனிச்சிறப்பு ஆகும்.

சகிப்புத்தன்மையால் நாம் பலத்தை பெற்று இருக்கிறோம். இதில் நம்மிடையே மாறுபட்ட போக்குகள் இருக்கலாம். அதில் பல்வேறு விவாதங்களும் இருக்கலாம். என்றபோதிலும் சகிப்புத்தன்மையை தொடர்ந்து பராமரித்திட வேண்டும். அதேபோல் அகிம்சை உணர்வையும் நாம் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.

எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் புனித நூல் இந்திய அரசியல் சாசனம். பாராளுமன்றம் எனது கோவில். இந்திய மக்களுக்கு சேவையாற்றியது பேரார்வம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன