கோலாலம்பூர், ஜன.25-
இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச தினத்தன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால் தமிழ்நாட்டில் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள் உள்பட முருகன் ஆலயங்களின் நடைகள் மூடப்படவுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட ஆலயங்களில் பூஜை நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலின் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜனவரி 31-ம் தேதி புதன்கிழமை, தைப்பூச விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5.16 மணி முதல் இரவு 8.50 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால், அன்று ஒருநாள் மட்டும் பூஜை நேரங்களில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

தைப்பூசத்தன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபஆராதனையும் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. காலை 7 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது. தீபாராதனைக்குப் பின், தைப்பூசத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் திருச்சப்பரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதி வழியாக உலா வந்து தைப்பூச மண்டபத்தை அடைகிறார்.

அவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கின்றன. மாலை 4 மணிக்கு, சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் ரத வீதிகள் வழியாக வந்து திருக்கோயிலை அடைகிறார். பின், சந்திர கிரகணத்தை முன்னிட்டு 4.15 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. பின், சந்திர கிரகணம் முடிந்ததும், இரவு 9.30 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு, ராக்கால பூஜைகள் முடிந்த பின் கோயில் நடை அடைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதேப்போல், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிலும் பூஜை நேரங்களிலும் ரத ஊர்வலத்தின் நேரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்திலும் சந்திர கிரகண நேரத்தில் ஆலய நடைகள் மூடப்படுவதோடு பூஜை நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் தைப்பூசத்தின் அடையாளமாக விளங்கும் பத்துமலைத் திருத்தலத்தில் ஆலய நடை சந்திர கிரகண காலத்தில் மூடப்படாது என்றும் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என்றும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அறிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், தைப்பூசத்திற்கு புகழ்பெற்ற இதர முருகன் ஆலயங்கள் கிரகண காலத்தில் நடை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.