‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி அமைச்சர்கள், எம்.பி.க்கள் மனு

0
10

புதுடெல்லி, ஜூலை 25-

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நாடு முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலமே நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் தமிழ்நாட்டில், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததால் நீட் தேர்வுக்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. என்றாலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆனால் இன்னும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை.

என்றாலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.  இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் குழு நேற்று 2-வது முறையாக டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து ‘நீட்’ தேர்வு விவகாரம் குறித்து பேசினார்கள்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவு தேர்விற்கு (நீட்) விலக்கு அளிக்க வேண்டி அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதியோடு 5 அமைச்சர்கள் கொண்ட குழு கடந்த 20-ந் தேதி டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக நேற்று டெல்லி சென்றுள்ள மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் அடங்கிய அமைச்சர்கள் குழுவினர், டெல்லி டிரான்ஸ்போர்ட் பவனில் மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணைமந்திரி பொன்.ராதா கிருஷ்ணனை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மத்திய இணை மந்திரியும் இணைந்து அழுத்தம் கொடுப்பதாக அமைச்சர்கள் குழுவிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் குழுவினர், டெல்லி, அக்பர் சாலையில் உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் இல்லத்துக்கு நேரில் சென்று, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மனு கொடுத்தனர். இதற்கு மத்திய உள்துறை மந்திரியும், தமிழகத்தின் கோரிக்கையினை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

மேலும், அமைச்சர்கள் குழு பாராளுமன்ற வளாக அலுவலகத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியையும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.