வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து
இந்தியா/ ஈழம்

டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து

சென்னை, ஜூலை 25-

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது எழும்பூர் கோர்ட்டு பதிவு செய்த குற்றச்சாட்டை ஐகோர்ட்டு நேற்று ரத்து செய்தது. அவரிடம் மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்து, 3 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ‘பார்க்லே’ வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் மதிப்புள்ள இங்கிலாந்து பவுண்டுகளை ‘டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக, கடந்த 1996–ம் ஆண்டு தற்போது அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப் பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கை பதிவு செய்தனர்.

இதேபோல, ஐரோப்பிய நாடுகளில் ‘ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட்’ என்ற பெயரில் ஓட்டல் தொடங்குவதற்காக ‘டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்’, ‘டெண்டி இன்வெஸ்ட்மெண்ட்’, ‘பேனியன் ட்ரீ’ ஆகிய 3 நிறுவனங்கள் சார்பில் ‘பார்க்லே’ வங்கியில் ரூ.36.36 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது மற்றொரு அன்னிய செலாவணி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகளும் நீண்டகாலமாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த வழக்குகளின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முதல் வேகம் பிடித்துள்ளது.

இதில், முதல் வழக்கில் டி.டி.வி.தினகரனிடம் கடந்த ஏப்ரல் 19–ந் தேதி எழும்பூர் கோர்ட்டு குற்றச்சாட்டு பதிவு செய்தது. அப்போது, தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க போதிய வாய்ப்புகளை தரவில்லை என்றும், எனவே, அந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க எழும்பூர் கோர்ட்டுக்கு இடைக்கால தடைவிதித்து கடந்த 7–ந் தேதி உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கக்கோரி அமலாக்கப் பிரிவு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 20 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. தினகரனுக்கு அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டது. வழக்கை மேலும் இழுத்தடிக்க இப்படி ஒரு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார் என்றும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் நேற்று பிறப்பித்தார். அதில், ‘டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவின்போது அவரது தரப்பு வாதத்தை எடுத்துரைக்க சரியான வாய்ப்புகள் தரப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு தான் வழக்கு விசாரணைக்கே முக்கியமானதாகும்.

எனவே, டி.டி.வி.தினகரன் மீது கடந்த ஏப்ரல் 19–ந் தேதி பதியப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்கிறேன். எழும்பூர் கோர்ட்டு வருகிற 31–ந் தேதிக்குள் ஏதேனும் ஒருநாளில் மீண்டும் அவரிடம் குற்றச்சாட்டு பதிவை நடத்த வேண்டும். அதேபோல, தினகரன் மீதான வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன