கோலாலம்பூர், ஜனம் 26-

2018-ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில், நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் அறிவித்ததுபோல், இந்தியர்களுக்கு என்று கூடுதலாக 1.5 பில்லியன் பங்குகள் தற்போது ‘அமானா சஹாம் சத்து மலேசியாவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை இந்தியர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு பங்குதாரர்களாகி பயனடைய வேண்டும் என்று, மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த அமானா சஹாம் சத்து மலேசியா பங்குகள், இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் 1 பில்லியன் பங்குகள் பொதுவான இந்தியர்களுக்கும், 500 மில்லியன் பங்குகள் B-40 பிரிவின் கீழ் குடும்ப வருமானம் உடைய இந்தியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பங்குகள் விற்பனை வரும் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கி, விற்றுத் தீரும் வரையில் விற்பனையில் இருக்கும் என்பதால், இந்திய மக்கள் இந்த முதலீடு திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள அருகில் உள்ள வங்கிகளுக்குச் சென்று தகவல்கள் பெற முனைப்புக் காட்ட வேண்டும் என டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் வலியுறுத்தினார்.

அதுமட்டுமல்லாமல், இந்த முதலீட்டு திட்டத்தில் B-40 பிரிவினர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும், அவர்களும் பயனடைய வேண்டும் என்ற வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் B-40 பிரிவின் பங்கு முதலீட்டு அளவை அதிகரிக்கும் வகையில், வட்டியில்லாக் கடன் திட்டத்தின் வழி, 5 ஆண்டுகால அவகாசத்தில் அவர்கள் பயன்பெறும் வகையில், 500 மில்லியன் மதிப்புடைய பங்குகளை B-40 பிரிவு இந்தியர்களுக்காக ஒதுக்கியுள்ளார். இத்திட்டத்தின் தொடக்கம் வெகு விரைவில் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும்.

இத்திட்டத்தின் வழி, தகுதியுடைய ஒவ்வொரு B-40 குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கும் வட்டி இல்லாக் கடனாக 5,000 வெள்ளி வழங்கப்பட்டு, பின்னர் அந்தப் பணம் அமானா சஹாம் சத்து மலேசியா திட்டத்தில் முதலீடு செய்யப்படும்.

இம்முதலீட்டுத் திட்டம் படிப்படியாக வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள 1 லட்சம் இந்தியக் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்கச் செய்யும் எனக் கூறிய டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன், அரசாங்கம் வழங்கியுள்ள இந்த அரிய வாய்ப்பை இந்தியர்கள் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் குடும்பச் சேமிப்பை அதிகரிக்கச் செய்ய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமதறிக்கையின் வாயிலாக அவர் கேட்டுக்கொண்டார்!