யோவில், ஜன.27 –

இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் நான்காவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 4 0 என்ற கோல்களில் யோவில் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியில் முதல் முறையாக களமிறங்கிய அலெக்சிஸ் சன்சேஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் அர்செனல் கிளப்பில் இருந்து 3 கோடியே 50 லட்சம் பவுண்ட் தொகைக்கு மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இணைந்த சன்சேஸ், 7 ஆம் எண் கொண்ட ஜேர்சியுடன் களமிறங்கினார். 2016 ஆம் ஆண்டில் எப்.ஏ கிண்ணத்தை வென்ற மென்செஸ்டர் யுனைடெட் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக யோவில் அணியை எதிர்கொண்டது.

முதல் பாதி ஆட்டத்தில் அடுக்கடுக்காக தாக்குதல்களை மேற்கொண்டாலும் மென்செஸ்டர் யுனைடெட்டின் முயற்சி பலன் அளிக்கவில்லை. எனினும் முதல் பாதி ஆட்டம் முடிவடைய நான்கு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது சன்சேஸ் தட்டி கொடுத்த பந்தை மார்கோஸ் ராஷ்போர்ட் கோலாக்கினார்.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் ஆன்டர் ஹெரேரா போட்ட கோலின் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் 2- 0 என்ற கோல்களில் முன்னணியில் இருந்தது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஜெசி லிங்காட் , ரோமெலு லுக்காகூ மேலும் இரண்டு கோல்களைப் புகுத்தி மென்செஸ்டர் யுனைடெட்டின் மிக பெரிய வெற்றியை உறுதிச் செய்தனர்.

யோவில் அணிக்கு எதிராக சன்சேஸ் வெளிப்படுத்திய ஆட்டத்தரத்தில் தாம் மனநிறைவு கொள்வதாக நிர்வாகி ஜோசே மொரின்ஹோ தெரிவித்துள்ளார். குறிப்பாக தாக்குதல் பகுதியில் இதர ஆட்டக்காரர்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை சன்சேஸ் வழங்கியுள்ளதாக மொரின்ஹோ கூறினார்.